பழைய 1,000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள சென்னை வட்டார தலைமை தபால் அலுவலகத்தில் காலை 8 மணியில் இருந்தே பணத்தை மாற்ற ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களை ஒழுங்குபடுத்தவும் பணத்தை மாற்றும்போது எந்த அசம்பாவிதமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வரிசையில் நின்ற மக்களிடம் பெண் போலீசார் ஒரு படிவத்தை கொடுத்தனர். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான்கார்டு, தேசிய வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அட்டையின் ஜெராக்ஸ் கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை வரிசையில் நின்ற பொதுமக்கள் நிரப்பியும், தாங்கள் கொண்டுவந்த பழைய ரூ.1000 மற்றும் இரண்டு 500 நோட்டுகளை தபால் நிலைய கவுண்ட்டர்களில் மாற்றக்கொடுத்தனர். அதற்கு கவுண்ட்டரில் உள்ளவர்கள் 1000 ரூபாய்க்கு பதிலாக 10 நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். இவ்வாறு மாற்றிக்கொண்ட சிலர் கூறும்போது, ரூ.4000 கொடுத்தால் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 1000 ரூபாய்க்கு மட்டுமே தபால் நிலையத்தில் பணம் மாற்றப்பட்டது. இதனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது என்றனர்.
சிறப்பு கவுண்ட்டர்கள் :
இதுகுறித்து தபால் நிலைய அதிகாரி கூறுகையில், இங்குள்ள தபால் நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் 6 திறக்கப்பட்டுள்ளன. பணத்தை டெபாசிட் செய்ய 4 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பணத்தை டெபாசிட் செய்பவர்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் பணத்தை டெபாசிட் செய்யலாம். அல்லது புதிதாக கணக்கு வைத்துக் கொள்ளலாம். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு ரூ.1,000 என்ற அளவுக்கு மட்டுமே மாற்றுகிறோம். அவர்களுக்கு 100 ரூபாய் நோட்டுகள் 10 மட்டும் கொடுக்கிறோம். ரிசர்வ் வங்கியில் இருந்து மேலும் பணம் கொண்டுவர வாகனம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பணம் தந்தால் கொடுப்போம் என்றார்.
இதேபோல அனைத்து தபால் நிலையங்களிலும் ஒருவருக்கு ரூ.1,000 என்ற அளவுக்கு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்தனர். இதனால் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணிச் சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...