உள்ளாட்சித்
தேர்தலை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால், கடந்த 26ம் தேதி முதல் வேட்புமனு
தாக்கல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என
எதிர்பார்க்கின்றனர்.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டை சரிபார்ப்பு, விரலில் மை வைப்பது போன்ற பணிகளிலும்; உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர், பஞ்., தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களிடம் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது உள்ளிட்ட பணியிலும் கல்வித்துறை ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். அதன்படி, 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு, கடந்த மாதம் 26ம் தேதி முதல் 3ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இப்பணியில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு டி.இ.ஓ., மற்றும் உதவி செயற்பொறியாளர் கிரேடு அதிகாரிகள் வேட்புமனுக்கள் பெற்றனர். ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பஞ்., தலைவர் பதவிகளுக்கு ஏ.இ.ஓ., துணை பி.டி.ஓ.,க்கள்; வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆசிரியர்களும் வேட்பு மனுக்கள் பெற்றனர்.
வேட்பு மனுக்கள் பெற்று, 4ம் தேதி மனுக்கள் பரிசீலனையில் இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணம் ஆகியவற்றை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்களில் ஒப்படைக்கும் பணி, நேற்று (7ம் தேதி) நடந்தது.
பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பணித் தகுதி, ஊதியம் ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல், தேர்தல் கால பணி ஊதியம் (மதிப்பூதியம்) வழங்கப்படும். தற்போது, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 26 முதல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சித் தேர்தலில் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது மட்டுமல்லாது தேர்தல் முடிந்து, பதவிப் பிரமாணம் செய்வது வரை தற்போது பணியில் ஈடுபடுவோரின் வேலையாகும்.
கடந்த 26 முதல் 4ம் தேதி வரை பணியில் ஈடுபட்டோம். முதல்பருவ (காலாண்டுத் தேர்வு) விடுமுறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டோம். அதில், 3 மற்றும் 4ம் தேதி பள்ளி வேலை நாட்கள்.நேற்று (7ம் தேதி) வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணத்தை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியிருந்தது.
எனவே, 3, 4 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும். இதன் மூலம், கடந்த 26ம் தேதி முதல் 7ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் பணிபுரிந்தோம். எங்களைப் போல, நகராட்சி, ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் வேளாண்துறை போன்ற துறை ஊழியர்களும் பணிபுரிந்துள்ளனர்.
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான ஊதியம் கிடைக்குமா அல்லது மீண்டும் தேர்தல் நடக்கும்போது, இதற்கான ஊதியம் சேர்த்து வழங்கப்படுமா என தெரியவில்லை' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...