பிளஸ் 2 தேர்வில் சர்ச்சைக்குள்ளான
பள்ளிகளின் தேர்வு மையங்களை ரத்து செய்ய, அரசு தேர்வுத்துறை முடிவு
செய்துள்ளது.தமிழகத்தில், அரசு தேர்வுத்துறை மூலம், 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும், 18
லட்சம் பேர் வரை பங்கேற்கின்றனர்.
தேர்வில்
நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் புதுப்புது
கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை விதிக்கிறது; இருப்பினும், அதையும் மீறி
முறைகேடுகள் நடக்கின்றன. தனியார் பள்ளிகளில் அமைக்கப்படும் தேர்வு
மையங்களில் தான் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
முறைகேட்டில் சிக்கும் தேர்வு மையங்களில்
கண்காணிப்பாளர்களாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளிடம்
கையூட்டு பெற்று, முறைகேட்டில் ஈடுபடுவது, கடந்த தேர்வுகளின் போது
கண்டறியப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
'வாட்ஸ் ஆப்' மூலம் கணித வினாத்தாள் வெளியானது; இதில், கல்வித்துறை
அதிகாரிகளே சிக்கினர்.
கடந்த ஆண்டு, இதுபோன்ற முறைகேடுகள்
கண்டறியப்படவில்லை. ஆனாலும், விடைத்தாள் திருத்தத்தில், ஈரோட்டில் உள்ள
பிரபல பள்ளி மாணவர்கள் ஐந்து பேருக்கு, ஆசிரியர் ஒருவரே தேர்வு எழுதியது
கண்டுபிடிக்கப்பட்டது; அந்த மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டு,
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு
பொதுத்தேர்வுக்கான பணிகளை தேர்வுத்துறை துவக்கியுள்ளது. தேர்வு மையங்களை
பட்டியலிடும் நடவடிக்கைகளும் துவங்கி உள்ளன. இதில், சர்ச்சைக்குரிய தனியார்
பள்ளிகளின் தேர்வு மையங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு தனியார் பள்ளியின் தேர்வு மையம்,
ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது. மற்ற மாவட்டங்களில், அதிக அளவில்
மாணவர்கள், 'பிட்' அடிக்க உதவுவது, கண்காணிப்பு பணிக்கு செல்லும்
ஆசிரியர்களுக்கு, உணவு மற்றும் பரிசு அளித்து கவனிக்கும் பள்ளிகளின்
பட்டியல் தயாரிக்கப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...