காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட
அமர்வில் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்
வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து காவிரி நதிநீர் பகிர்வு விவகாரம் தொடர்பான
வழக்குகளை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம்
அமைத்துள்ளது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய்,
ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர். காவிரி விவகாரம்
தொடர்பாக தமிழகம், கர்நாடகம் மற்றும் மத்திய அரசு சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை
உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், காவிரியில் இருந்து
தமிழகத்துக்கு அக்டோபர் 7 முதல் 18ஆம் தேதி வரை தினமும் 2,000 கன அடி
நீரைத் திறந்து விடுமாறும் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் கண்காணிப்புக் குழுவை
அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் மத்திய நீர் ஆணைய உறுப்பினர்,
தலைமைப் பொறியாளர், தமிழக - கர்நாடக அரசுகளின் தலைமைச் செயலர்கள் அல்லது
மாநில அரசுகளால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இடம் பெற
வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், காவிரி விவகாரம்
தொடர்பாக விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்கவும் அவர்கள்
இசைவு தெரிவித்தனர். அதன்படி, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக்
மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு
அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அமர்வின் முன்பு வரும் 18ஆம் தேதி காவிரி
வழக்கு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...