புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு பள்ளி பிளஸ் 2
மாணவர்களுக்கான, நீட் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் 6 மையங்களில்
நேற்று துவங்கியது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு படிக்க முடியும்.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட் தேர்வு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு, நீட் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வு 26ம் தேதி நடத்தப்பட்டது.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற புதுச்சேரியை சேர்ந்த 200 மாணவ, மாணவிகளும், காரைக்காலில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான நீட் சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. புதுச்சேரி நகர பகுதியில் மாணவிகளுக்கு, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், மாணவர்களுக்கு வீரமாமுனிவர் பள்ளியிலும் பயிற்சி துவங்கியது.
கிராம புறத்தில் மாணவிகளுக்கான பயிற்சி வகுப்புகள், கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், மாணவர்களுக்கு வில்லியனுார் விவேகானந்தா அரசு பள்ளியிலும் வகுப்பு துவங்கியது.
இதேபோல், காரைக்காலில் கோவில்பத்து தந்தை பெரியார் பள்ளி, அன்னை தெரேசா பள்ளியிலும் வகுப்புகள் துவங்கியது.
இந்த வகுப்புகள் சனிக்கிழமை தோறும் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, தொடர்ந்து 20 வாரங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த நீட் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழாவில், பள்ளி முதல்வர் வாசுகி வரவேற்றார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் குமார் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசுகையில்,'மாணவர்களுக்கு உயர்வான எண்ணம் வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி, படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண்களை பெற வேண்டும். நீட் தேர்வுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சியை பயன்படுத்தி கொண்டு முன்னேற வேண்டும். ஆசிரியர்களிடம் பாடம் தொடர்பாக, சந்தேகம் கேட்க தயங்க கூடாது' என்றார்.
நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் தோத்தாரி, ஆசிரியர்கள் குப்புசாமி, சீனிவாசன், முல்லைவாணன், பிரேம்குமார் ஜூலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...