காளையார்கோவில்: 20 ஆண்டுகளுக்கு முன் கருவிக்கண்மாய் கிராமத்தில்
'கைநாட்டு' பெண்களே அதிகம்.
தற்போது படிக்காத பெண்களே இல்லை என்ற நிலை
ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் ஒன்றியம் புலியடிதம்மம்
ஊராட்சிக்குட்பட்டது கருவிக்கண்மாய் கோபாலபட்டணம் கிராமம். 120
குடும்பங்கள் வசிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு பட்டதாரி
மட்டுமே இருந்துள்ளார்.
அரசு ஊழியர்கள் குறைவு. பொருளாதாரத்தில் பின் தங்கிய
நிலையில் இருந்துள்ளனர்.1996ல் ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் 'காந்திஜி
நற்பணி மன்றம்' துவக்கியுள்ளனர்.தொடர்ந்து இளைஞர்கள்,மாணவர்கள் இந்த
மன்றத்தை நடத்தி வருகின்றனர். கிராமத்தினர் அனைவரையும்
கல்வியாளர்களாக்குவதே, மன்றத்தின் நோக்கமாக இருந்துள்ளது. முதல் பணியாக
முதியோர்களுக்கு கையெழுத்து போடும் பயிற்சி வழங்கி, கைநாட்டை முழுமையாக
ஒழித்துள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இன்று
வீட்டுக்கு ஒரு பட்டதாரி,பொறியாளர்கள் உருவாகியுள்ளனர். பெண்கள் உயர்கல்வி
பெற்றுவருகிறார்கள். பலர் கல்வித்துறை மற்றும் அரசு உயர் பதவியில்
உள்ளனர்.போலீஸ் வழக்குன்னு அலைவது கிடையாது. அவ்வப்போது ஏற்படும்
பிரச்னைகளை, அவர்களே பேசி
தீர்த்துக்கொள்கின்றனர்.ஒருங்கிணைப்பாளரும்,பட்டதாரி ஆசிரியருமான சுரேஷ்
கூறுகையில்,“ 1999ல் இளநிலை பட்டம் முடித்தேன். அப்போது என்னை போன்றவர்களை
வழி நடத்த சரியான வழிகாட்டி கிடையாது. மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். இதே
நிலை மற்றவர்களுக்கும் வரக்கூடாது என நினைத்தேன். பள்ளி மாணவர்களுக்கு
சிறப்பு வகுப்பு எடுத்தேன். பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு
உயர்கல்வி பெற வழிகாட்டினேன். மாணவர்களை ஊக்கப்படுத்த 10,12 வது வகுப்பு
பொதுதேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றவர்களை பாராட்டி சிறப்பு பரிசு
வழங்கி வருகிறோம். பெண்களை உயர்கல்விக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு
ஆலோசனை வழங்கி வந்தோம். கல்லுாரி செல்லும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும்
ஊக்கப்பரிசு வழங்கி வருகிறோம். ஆசிரியர் தேர்வு, ராணுவம், போலீஸ் பல்வேறு
அரசு பணிக்கான தேர்வுகளை கையாளுவது குறித்து பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கி
வருகிறோம். பட்டப்படிப்பு படிக்காத பெண்களே கிடையாதுங்கிற நிலைக்கு
உயர்ந்துள்ளோம். இனி வரும் காலங்களில் அரசின் அனைத்து துறையிலும் எங்கள்
கிராமத்து இளைஞர்கள் இடம் பெறவேண்டி கடுமையாக உழைத்து வருகிறோம்.அடுத்த
செயல்திட்டம் பசுமையான கிராமம் உருவாக்குவது. கிராமத்திலும்,
கண்மாய்கரையிலும் இருக்கும் கருவேல் மரங்களை அகற்றி பலன் தரும்
மரக்கன்றுகள் நட்டு பசுமையான கிராமமாக மாற்ற உள்ளோம்.ஆரம்பத்தில்
பெற்றோரிடம் பணம் மற்றும் தானியங்களை வாங்கி சேகரித்து, அதில் வரும்
வருமானத்தை கொண்டு செயல்படுத்தி வந்தோம். இன்றைக்கு நிதி உதவிக்கு குறைவே
இல்லைங்கிற நிலைக்கு வளர்ந்துள்ளோம். மன்றம் துவங்கியதில்இருந்து தினமலர்
நாளிதழ் வாங்கி மாணவர்கள் படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி
வருகிறேன்,”என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...