தற்போது வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்றவைகள் இளைஞர்களை
சீரழித்து வருகிறது என்று கூறி வந்தாலும், சிவங்கையில் 'வாட்ஸ் ஆப்'
குரூப்பால் அரசு பள்ளி வாழ்வு பெற்றுள்ளது.
ஐம்பது ஆண்டுகளை நெருங்கும் இந்த பள்ளியில், கடந்த ஆண்டு 18
மாணவர்களே இருந்தனர். தேவையான வசதி இல்லாததே மாணவர்களின் குறைவுக்கு காரணம்
என, தெரியவந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், அன்புச்செல்வன், முருகன்
சேர்ந்து 'பயர்வே' என்ற 'வாட்ஸ்ஆப்' குரூப்பை துவக்கி 100 இளைஞர்களை
ஒருங்கிணைத்தனர். இதன் மூலம் வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களும்
தங்களால் முடிந்த நிதியை அளித்தனர். 3 லட்சம் ரூபாய் வரை சேர்ந்தது. அதன்
மூலம் பள்ளி கட்டடத்தை சீரமைத்தனர். ஊஞ்சல், சறுக்கல் மற்றும் விளையாட்டு
உபகரணங்கள், இருக்கைகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி
கொடுத்தனர். அவர்களே வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கையை
அதிகரித்தனர். ஆங்கில வழிக்கல்வியும் துவங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு
தமிழ் வழியில் 25 மாணவர்கள், ஆங்கில வழியில் 30 மாணவர்கள் படிக்கின்றனர்.
அனைவருக்கும் சீருடை,டை,ஷூ,அடையாள அட்டை இலவசமாக கொடுத்தனர். பாடம்
எடுப்பதற்கு கூடுதலாக இரு ஆசிரியர்களை நியமித்தனர். அவர்களுக்கு மாதம் 6
ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்குகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில்
மரக்கன்றுகளை நடவு செய்து சொட்டுநீர் பாசன வசதி செய்து
கொடுத்தனர்.அன்புச்செல்வன், முருகன் கூறியதாவது: வாரத்தில் ஒரு நாள் யோகா,
புதன், வியாழன் சிலம்பாட்டம் சொல்லி கொடுக்க தனியாக ஆசிரியர்களை
நியமித்துள்ளோம். அவர்களுக்கு மாதம் 4 ஆயிரம் செலவழிக்கிறோம். மேலும்
ஏற்கனவே உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு வழங்கப் படுகிறது.
மற்ற மாணவர்களுக்கு நாங்களே உணவு வழங்குகிறோம். பள்ளி
விழாக்களுக்காக தனியாக நிதி ஒதுக்கியுள்ளோம். ஏற்கனவே உள்ள பழைய
கட்டடத்தையும் புதுப்பிக்க உள்ளோம்.
இதன் மூலம் எங்கள் ஊர் சிறுவர்கள் வெளியூர் சென்று படிப்பது குறையும், என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...