பள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும்,
வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார்
அப்பா.
வகுப்பறைக்குள் நுழைவதற்குள்ளே, மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப்
வாங்குவதிலும் பாக்கெட் மணி கரைந்து விடும். சில குழந்தைகள் மட்டுமே அதை
மண் உண்டியலில் சேமித்து வைப்பார்கள்.
அலமாரியில் துவங்கி அக்காவின் ஜியாமெட்ரி பாக்ஸ் வரை,
கிடைக்கும் சிறுசிறு தொகையை, சேமிப்பதற்கென்றே பள்ளிகளில், 'சஞ்சாயிகா'
திட்டம் இருந்தது. கையில் காசு கிடைக்கும் போதெல்லாம், ஆசிரியரிடம்
கொடுத்து, தங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்வார்கள். இதில், மாணவர்களுக்கு
பாஸ்புக் வசதி வேறு.
இதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர், தினமும் சேரும் தொகையை,
அருகிலுள்ள தபால்நிலையத்தில் மாணவர்கள் பெயரில் செலுத்தி விடுவார்.
சேமிப்புப் பணத்தை, ஆண்டு இறுதியிலோ அல்லது தேவைப்படும்போதோ
எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, 3 சதவீத வட்டி கிடைக்கும். மாணவர்களால்
மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்த இத்திட்டத்தினால், சிக்கனம், சேமிப்போடு
சேர்ந்து நிர்வாகத் திறமையையும் மாணவர்களிடையே வளர்ந்தது.
ஆனால் இன்று, ஆறாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு, 'சேவிங்ஸ்
அக்கவுன்ட்' இருக்கிறதோ இல்லையோ, பேஸ்புக் அக்கவுன்ட் துவங்கியாகிவிட்டது.
இப்படியொரு சூழலில், குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை விதைத்த, 'சஞ்சாயிகா' திட்டம், வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டது.
ஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த இத்திட்டத்தை,
அக்.,1 முதல் முழுவதுமாக நிறுத்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தபால்துறை
வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தபால்துறை அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:
அப்போது எல்லாம், 10 பைசா, 25 பைசாவுக்கு 'சேவிங்ஸ் ஸ்டாம்ப்' கிடைக்கும். அந்த ஸ்டாம்புகளை சேகரித்து அட்டையில் ஒட்டி, தபால்
நிலையங்களில் கொடுத்து கணிசமான தொகையை மாணவர்கள் சேமித்து
வந்தனர். பின், 1970ல் மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவனம் மூலம்
பள்ளிகளில் 'சஞ்சாயிகா' திட்டம் துவங்கப்பட்டது.
சேமிப்புக்கான அடிப்படையை மாணவர்கள் வளரும் பருவத்திலே
கற்றுக்கொள்ள இத்திட்டம் அரிய வாய்ப்பாகவே இருந்தது. ஆனால், பல்வேறு
கவர்ச்சிகர திட்டங்களால், 'சஞ்சாயிகா' திட்டம் அடியோடு முடங்கிவிட்டது.
இந்த நுாற்றாண்டு துவக்கத்திலிருந்தே ஓரிரு பள்ளிகளை தவிர பெரும்பாலான
பள்ளிகளில் இத்திட்டம் செயலிழந்து விட்டது என்பதே உண்மை.
இவ்வாறு அவர், கூறினார்.
கோவைபேரூர் தமிழ்க்கல்லுாரி, பேராசிரியர் ஞானப்பூங்கோதை
கூறுகையில், ''உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது, ஊர்க் காசு கொடுத்துச்
செல்லும் பழக்கம் இருந்தது. மொத்தமாக சேரும் தொகையை, 'சஞ்சாயிகா' அட்டையில்
வரவு வைக்கும் வரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
சேமிப்பு தொகையை வைத்தே, சைக்கிளுக்கு காற்றடிப்பது, பஞ்சர்
பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தியாகிவிடும். இன்று என் வீட்டு
பட்ஜெட்டை திறமையாக கையாளுகிறேன் என்றால், அன்று கிடைத்த சேமிப்பு பழக்கமே
முக்கிய காரணம். 'சஞ்சாயிகா'வின் இழப்பு இன்றைய தலைமுறையினருக்கு
பேரிழப்பாகும்,'' என்றார்.
மாணவன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தற்போது, பிளஸ் 2 படிக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல், 'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்தில் சேகரித்து வருகிறேன். தினமும், அப்பா கொடுக்கும் பத்து ரூபாயை, உண்டியலில் சேர்த்து வைத்து, அதை அப்படியே எண்ணிப்பார்க்காமல் பள்ளியில் செலுத்தி விடுவேன். பள்ளியிலிருந்து வெளியேறும்போது கணக்கு முடிக்கலாம் என்றிருந்தேன். அதற்கான வாய்ப்பை தபால்துறையே ஏற்படுத்தியதால், வேதனையாக உள்ளது,'' என்றார்.
மாணவன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தற்போது, பிளஸ் 2 படிக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல், 'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்தில் சேகரித்து வருகிறேன். தினமும், அப்பா கொடுக்கும் பத்து ரூபாயை, உண்டியலில் சேர்த்து வைத்து, அதை அப்படியே எண்ணிப்பார்க்காமல் பள்ளியில் செலுத்தி விடுவேன். பள்ளியிலிருந்து வெளியேறும்போது கணக்கு முடிக்கலாம் என்றிருந்தேன். அதற்கான வாய்ப்பை தபால்துறையே ஏற்படுத்தியதால், வேதனையாக உள்ளது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...