சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடும்
பணியை, பிற மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்த, தமிழக பள்ளிக் கல்வித்துறை
முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வித் திட்டம், 2011ல்
அமலுக்கு வந்தது.
இதற்கான
பாடப் புத்தகங்கள் அச்சடிப்பை, தமிழ்நாடு பாட நுால் கழகம், தமிழகம்,
ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநில அச்சகர்களுக்கு, டெண்டர் மூலம்
வழங்கி வந்தது. புத்தக வடிவம் பெரிதாக இருந்ததால், கர்நாடக அச்சகர்கள்,
தமிழக புத்தகங்களை அச்சடிப்பதை நிறுத்தினர்;
பின், ஆந்திரா அச்சகர்கள், அதிக புத்தகங்களை
அச்சிட்டனர்.நடப்பு ஆண்டில், வண்ணம் இல்லாத கறுப்பு, வெள்ளை நிறம் உடைய,
பிளஸ் 2 புத்தகங்களுக்கு, அச்சுக்கூலி குறைக்கப்பட்டதால், புத்தகங்களை
அச்சிட, ஆந்திரா அச்சகர்கள் மறுத்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த பாட நுால்
கழகம், நிலைமையை சமாளிக்க, தமிழக அச்சகர்களின் உதவியை நாடியது. தமிழக
அச்சகர்களும், விலையை பற்றி கவலைப்படாமல், மூன்று பருவத்திற்கான
புத்தகங்களை அச்சிட்டுள்ளனர்.
பிற மாநிலங்களில், அந்தந்த மாநில
அச்சகர்களுக்கே, பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தரப்படுகிறது. தமிழக
புத்தகங்களுக்கு, தமிழக அச்சகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என,
அச்சகர்கள் கோரி வந்தனர். வெளி மாநிலங்களில் அச்சிட கொடுப்பதால்,
போக்குவரத்து செலவு அதிகமாவதை உணர்ந்த பாட நுால் கழகமும், பிற மாநிலங்களை
விட, தமிழக அச்சகங்களே சிறந்தவை என, முடிவுக்கு வந்துள்ளது.
இதற்காக, பாடப் புத்தக அச்சடிப்பு குறித்த
அரசாணையை திருத்த, ஆலோசனை நடந்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக அச்சக
உரிமையாளர்களை அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் பேச்சு நடத்த
உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...