தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை 4 வாரத்துக்குள்
நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவராக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு இருந்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்றார். அதன்பின்பு தற்போது வரை அந்த பதவி காலியாக உள்ளது. இதன்காரணமாக 2016-2017-ம் ஆண்டுக்கு தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இதன்காரணமாக தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலித்து வருகின்றன. எனவே, காலியாக உள்ள தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவியை உடனடியாக நிரப்ப பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசுக்கு உத்தரவு
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவரை தமிழக அரசு 4 வாரத்துக்குள் நியமிக்க வேண்டும். அவ்வாறுதலைவர் நியமிக்கப்பட்ட விவரத்தை அரசு வக்கீல் அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...