சமீப காலமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வது அதிகரித்து
வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு, தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட்
கட்டாயம் அணிய வேண்டும், அணியாதவர்களின் உரிமம் மற்றும் வாகனத்தை பறிமுதல்
செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. ஆனால்,
பெரும்பாலான மக்கள்
ஹெல்மெட்டை அணிவதை தவிற்கின்றனர். இந்நிலையில், சென்னையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது சுமார் 50,000 வழக்குகள் போடப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து வாகனங்களைப் போக்குவரத்துப் போலீஸார் பறிமுதல் செய்கின்றனர். அப்படி பிடிபடும் வாகனம் ஓட்டுபவர்கள் நடந்து செல்ல வேண்டும் அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டும். ஏனெனில், ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினால்கூட போக்குவரத்து போலீஸார் அந்த வாகனங்களைக் கொடுப்பதில்லை. சிபாரிசு செய்பவர்களிடம், ‘உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என தெரிவிக்கின்றனர். இது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையாக இருந்தாலும், வாகனம் ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து சென்னை போக்குவரத்து அதிகாரி ஒருவர், “உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் ஹெல்மெட் போடாதவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்கிறோம். சில நேரங்களில் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களைக் காண்பித்தால் சூழ்நிலைக்கு ஏற்ப வாகனங்களை பறிமுதல் செய்யாமல் விட்டு விடுகிறோம். ஹெல்மெட் அணியாதவர்களிடம் போலீஸார் அபராதம் வசூலிக்க முடியாது. இதற்காக செயல்படும் நடமாடும் நீதிமன்றங்களில் வாரம் ஒருமுறை ஹெல்மெட் போடாதவர்கள்மீது வழக்குப் பதிவு செய்கிறோம். நீதிமன்றம்தான் வழக்குகளை தீர்த்து வைக்கிறது.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து ஹெல்மெட் அணியாதவர்கள்மீது தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக இதுவரை சுமார் 50,000 வழக்குகள் போடப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுத்தாலும்கூட, 100% ஹெல்மெட் அணியும் நிலை இன்னும் ஏற்படவில்லை. 20% பேர் ஹெல்மெட் அணியாமல்தான் செல்கிறார்கள். ஹெல்மெட் வைத்திருந்தாலும் சில ஆண்கள் அதை தலையில் அணியாமல் பெட்ரோல் டேங்க் மீது வைத்து செல்கின்றனர். அதே போல் பெண்கள் வாகனங்களில் இருக்கைக்கு அடியில் ஹெல்மெட்டை மறைத்து வைக்கின்றனர். போலீஸாரைப் பார்த்ததும் ஹெல்மெட் வைத்திருப்பதாக எடுத்து காட்டுகின்றனர்.
சட்டப்படி பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் போட வேண்டும். ஆனால், தற்போது வாகனம் ஓட்டுபவர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மட்டுமே தீவிரமாக அமல்படுத்தி வருகிறோம் விரைவில் 100% பேர் ஹெல்மெட் போடும் நிலையை உருவாக்குவோம். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட்டை கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். அப்போது தான் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...