வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்கள்
எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்று ஜி.எஸ்.எம். அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளவில் உள்ள மொபைல் ஆபரேட்டர்களின்
நலனுக்காக கடந்த 1995ஆம் ஆண்டு ஜி.எஸ்.எம். (குரூப் ஸ்பெஷல் மொபைல்)
அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த
அமைப்பில் உலகளவில் உள்ள சுமார் 800 ஆபரேட்டர்களும் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள, ‘இந்தியா 2016: மொபைல்
பொருளாதாரம்’ அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான
காலகட்டத்தில், இந்தியாவில் 616 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் உள்ளதாக
தெரிவித்துள்ளது. உலகளவில் மொபைல் சந்தையில் இரண்டாவது இடத்தில் இந்தியா
உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொபைல் சேவைகளை அதிகரிப்பது, மொபைல் கட்டணத்தைக்
குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின்
மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்றும்
தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிராட்பேண்ட் சேவை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு
உயர்ந்து வரும் சூழலால் வரும் 2020க்குள் இந்தியாவில் பிராட்பேண்ட்
இணைப்புகளின் எண்ணிக்கை 670 மில்லியனாக உயரும் என்றும் அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது, அடுத்ததாக இந்தியாவில் உள்ள மொபைல்
வாடிக்கையாளர்கள் அதிகளவில் 3G சேவையில் இருந்து 4G சேவைக்கு தங்களை மாற்றி
வருகின்றனர். இதையடுத்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 280
மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் 4G சேவையைப் பயன்படுத்த உள்ளதாகவும்,
கடந்த 2015ஆம் ஆண்டு முடிவில் இந்தியாவில் 4G சேவையைப் பயன்படுத்துவோரின்
எண்ணிக்கை மூன்று மில்லியன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜி.எஸ்.எம். அமைப்பின் இயக்குநர் மாட்ஸ்
கூறுகையில், ‘இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவலும்
இந்தியாவில் அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் மொபைல் சந்தை
மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் சந்தை
அதிகரிப்பதன் மூலம் அனைவரையும் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின்
டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு இது உதவும்’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...