Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கண்கள் ஆசிரியர்களைத்தான் கவனிக்கின்றன!

      ஒன்றா… பலவா… எது சிறந்தது? - இதுதான் அறிவுலகின் மிகப் பழமையான கேள்வி. ஒன்றுதான் சிறந்தது என்பது அறிவுலகம் எழுதிய பழைய விடை. விடையை விளக்க எண்ணற்ற கதைகள்!


      பூனை - நரிக் கதை அவற்றில் ஒன்று. இந்தக் கதை இல்லாத நாடு கிடையாது. கீழை நாடுகளில் பூனை நரி. மேற்கு நாடுகளில் முள்ளம்பன்றி - நரி! கதை இதுதான். பூனையும் நரியும் நண்பர்கள். ஒருநாள், ‘உனக்கென்ன தெரியும்? எனக்கென்ன தெரியும்?’ என்று இரண்டும் பேசிக்கொள்கின்றன. ‘எனக்குச் சிறுசிறு உபாயங்கள் பல தெரியும்’ என்றது நரி. ‘எனக்கு ஒரே ஒரு பெரிய உபாயம் தெரியும்’ என்கிறது பூனை.
சற்று நேரத்தில் வேடர்கள் வருகிறார்கள். அவர்க ளுடன் வேட்டை நாய்கள் வருகின்றன. தப்பிக்கப் பல உபாயங்கள் செய்தும் நரியால் முடியவில்லை. நாய்களிடம் மாட்டிக்கொள்கிறது. பூனைக்கு மரம் ஏறத் தெரியும். சரசர என்று மரத்தில் ஏறித் தப்பிக்கிறது. ‘எனக்குத் தெரிந்த ஒரே உபாயத்தால் தப்பித்துவிட்டேன் பார்’ என்று மாட்டிக்கொண்ட நரியைப் பார்த்துச் சொல்கிறது பூனை.
பல வேண்டாம்; ஒன்று போதும்
பல வேண்டாம்; ஒன்று போதும் என்பது கதையின் நீதி. பிரச்சினையைச் சுலபமாக்கி வழங்கப்பட்ட நீதி. இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது அதே நீதி!
காலம் மாற மாற, மாற்றத்துக்கேற்ற திறன்கள் தேவைப்படுகின்றன. இப்போது ஒன்று போதாது; பல வேண்டும் - இது பன்மையைப் போற்றும் காலம்!
மரத்தில் ஏறித் தப்பிக்கையில், மரத்தில் மலைப் பாம்பு இருந்தால் பூனை என்ன செய்யும்? - எனப் புதுக் கேள்விகள் எழுந்தபோது பழைய நீதி தடுமாறியது.
2008 பொருளாதார வீழ்ச்சியின்போது, ஒற்றை நோக்குப் பெருநிறுவனங்கள் தோல்வியைத் தழுவ, பல சிறு திறன் கொண்ட நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நின்றதை நாம் அறிவோம்.
இன்று வரை, ‘ஒன்றுதான் சிறந்தது’ என்ற பிடிவாதம் ஊன்றிக் கிடக்கும் இடம் - பள்ளிக்கூடம். அது முன்வைக்கும் ஒன்று - தேர்வு!
விளையாட்டு, கலை, தொழில்திறன் - எல்லாம் இருக்கட்டும் ஒரு ஆறுதலுக்கு. நாய்கள் துரத்தும்போது இதிலொன்றும் சரிப்படாது. தேர்வுதான் காப்பாற்றும் சக்தி! அது அளந்து சொல்வதுதான் உன் அறிவு. ‘வனத்துல திரிஞ்சாலும் இனத்துல வந்து அடை’ என்று சொலவடை சொல்வதுபோல, அங்கே, இங்கே போய் லேசாக எட்டிப் பார்த்தாலும், கடைசியில் பரீட்சை ஹாலுக்கு வந்து சேர்!
வகுப்பறைகள் விதிவிலக்கா?
சில நீதிகளை, நம்பிக்கைகளைத் தலைகுப்புறக் கவிழ்த்துத்தான் புதிய சிந்தனை பிறந்திருக்கிறது. பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்து கவிழவில்லையா? கடவுளே கலை இலக்கியப் படைப்புகளின் மையம் என்ற நிலை மாறி, மனிதனே மையம் என்ற மறுமலர்ச்சி தோன்றவில்லையா? வகுப்பறைகள் விதிவிலக்கா?
விழிப்புணர்வு காணாத இடமல்ல வகுப்பறை. ‘ஆசிரியரே மையம்’, ‘விவரித்தலே கற்பித்தல்’ என்ற போக்குகள் ஆட்டங்கண்டு வருகின்றன. பள்ளிக்கு வருமுன் அவர்களுக்கு எதுவும் தெரியாது. அல்லது ஒவ்வொன்றையும் தவறாகப் புரிந்துவைத்திருப்பார்கள்’ என்று குழந்தைகள் குறித்த பள்ளி மதிப்பீடுகள் தகர்ந்துவருவதும் உண்மை.
மனதுக்கு இதமான சிறு சிறு முயற்சிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் ஓராயிரம் ஆற்றல்களை மலர வைக்கும் பெருமாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. உலகெங்கும் பள்ளித் தேர்வுமுறை இளக்கம் பெற்று வரும்போது, இந்தியாவில் அது மேலும் மேலும் இறுகிவருகிறது. தேர்வு என்ற ஒன்றை நோக்கிப் பிள்ளைகளைத் துரத்துவதும், குழந்தைகளுக்குள் இருக்கும் கலைஞர்களையும், விஞ்ஞானிகளையும், வீர வீராங்கனைகளையும் பிரித்து வெளியேற்றுவதும் உக்கிரமாய்த் தொடர்கிறது.
இயல்புப்படுத்துவது (normalisation) என்ற பெயரில் நடக்கும் சமூக அதிகாரம் குறித்து பூக்கோ (Foucault) நிறையப் பேசுவார். சம்பளம் வாங்குகிறார்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் மீதும், சம்பளம் வாங்கத் தயாராகிறார்கள் என்ற அடிப்படையில் மாணவர்கள் மீதும் இயல்புப்படுத்துவது என்ற அதிகாரம் பள்ளியில் பாய்கிறது. தேர்வுதான் பள்ளியின் இயல்பு. விலகினால்? ‘‘நாளைக்குப் பரீட்சை. இன்னைக்கு மேட்ச் ஆடப் போறேங் கிறான்… சுத்தக் கிறுக்கன்!”ஆற்றல்களைப் பறிகொடுத்த ஆசிரியர்களுக்கும் கணக்கில்லை. கலைத்திறன்கொண்ட ஆசிரிய நண்பரைப் பாராட்டிச் சொன்னபோது, நிர்வாகி என்னிடம் சலித்துச் சொன்னார், ‘‘பாட்டெல்லாம் நல்லாத்தான் பாடுவாரு.. ஆனா, ரிசல்டைத்தான் காணோம்!”
ஆசிரியரைப் பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாகச் சில கண்கள்; ஆதங்கத்துடன் சில கண்கள்; எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள்.
ஆனால் இளங்கண்கள்... எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க இவரால் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை - இந்தக் கண்களும் கண்களின் எதிர்பார்ப்புகளும்தான்!
போக வேண்டிய தூரமும், தாண்ட வேண்டிய தடைகளும் ஏராளம் இருக்கின்றன. தேர்வு தாண்டிக் குழந்தைகளைப் புரிந்துகொள்வதும், கொண்டாடு வதும்தான் எடுத்துவைக்க வேண்டிய முதல் எட்டு.
- ச.மாடசாமி,  ஓய்வுபெற்ற ஆசிரியர். ‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.  தொடர்புக்கு: smadasamy1947@gmail.com




1 Comments:

  1. எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே ! நல்ல பதிவு நன்று

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive