Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்!

இன்றைய இயந்திரயுகத்தில் தினசரி குளிப்பதற்கே நேரம் இல்லாத நிலையில், எண்ணெய் குளியலுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஏராளம்.
அரக்கப்பறக்கக் குளித்துவிட்டு ஆபீஸை நோக்கிப் பயணிக்கும் நாம், வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னதை பொருட்படுத்தவில்லை. அதனால் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும்  எண்ணெய்க் குளியல் நம் வீடுகளில் சம்பிரதாயமாக நடைபெறுகிறது.
நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
எண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது.
                                 
எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் உகந்தது.  நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி, முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும். பிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் மெள்ள மெள்ள தேய்த்துவிட வேண்டும். பின், ஓரளவு வெதுவெதுப்பான நீரில் சீகக்காய் அல்லது அரப்பைச் சேர்த்து எண்ணெய் போக குளிக்க வேண்டும். ஷாம்புவைத் தவிர்ப்பது நல்லது. காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம். நன்றாக எண்ணெய் தேய்த்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும்.
வறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.
வாதம், இடுப்பு, முழங்கால்வலி, மூட்டுவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித்தொல்லை இருப்பவர்கள், கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்குத் தைலத்தை வாங்கி தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் தைலம், வெட்டிவேர் தைலம் போன்றவையும் குளியலுக்கு உகந்தது. குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்டிவிட வேண்டும்.
 பழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.
பொதுவாகவே எண்ணெய் தேய்த்துக் குளித்த தினத்தில் தம்பதியர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது, முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால், அன்றைய தினம்  உச்சி வெயிலில் எங்கும் செல்லக் கூடாது. வெளிச்சம் படும்படி வெளியில் அமர்ந்திருக்கலாம்.
உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நம் பாரம்பரிய குளியல் முறையைப் பின்பற்றுவது, நம் முன்னோர்களின் வாழ்வியலை பின்பற்றுவதுதானே!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive