ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட
வாழ்த்துச் செய்தி: நாட்டின் கல்வித் தரத்தை உலக அளவுக்கு உயர்த்த
வேண்டும் என்பதே குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கண்ட கனவாகும்.
நாட்டின் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமநிலையுடனும், சகோதரத்துவத்துடன்
கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்து வந்தது.
புதிய கற்பிக்கும் முறை மூலம்
மாணவர்களுக்குப் பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து, நாட்டை உலகளவில்
உயர்த்திக் காட்டுபவர்கள் ஆசிரியர்கள்தான். இன்றைய நிலையில் நாம் எந்த
இடத்தை அடைந்திருந்தாலும், நம்மை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு நன்றியையும்,
மரியாதையும் தெரிவிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு
நல்வாழ்த்துகள் என்றார்.
மு.க.ஸ்டாலின் (எதிர்க்கட்சித் தலைவர்):
மாணவர்களின் எதிர்காலத்துக்காக தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியைத்
தியாகம் செய்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபடும்
ஆசிரியர்களின் அரிய சேவையை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான
தினம் ஆசிரியர் தினம். மகத்தான கல்விப் பணியை மேற்கொள்ளும்
ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): மாணவர்களின்
ஏற்றத்துக்கான ஏணியாகத் திகழும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். இந்த
நன்னாளில் நல்லாசிரியர் விருதுகளைப் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
பாராட்டுகள். தரமான கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கும், ஆசிரியர்களின்
நிலையை உயர்த்தவும், அவர்களின் உதவியுடன் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும்
இந்த நாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
வைகோ (மதிமுக பொதுச் செயலர்): ஆசிரியர் பணி
என்பது சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்துக்கான சிறந்த பணி. பல
இன்னல்களைத் தாங்கி, தன்னலமின்றி சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வரும்
ஆசிரியர் சமூகத்துக்கு வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): பெற்றோர்கள்
ஒரு குழந்தையை உலகுக்குத் தருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் அந்தக்
குழந்தைக்கு உலகத்தையே தருகின்றனர். இந்த உண்மை என்றும் நிலைத்து நிற்க
வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும். சமுதாயத்தில்
அவர்களுக்கு உரிய இடத்தை, அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...