சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய
கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது.
கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற
உத்தரவுப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு
அமைத்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக்
பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள்; ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை
அடிப்படையில்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
பணிகள் முடக்கம் : கமிட்டியின் முதல்
தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார்; பல்வேறு
காரணங்களால், அவர் பதவி விலகினார். பின், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற
நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக,
கட்டணம் குறித்து விசாரணை நடத்தினார்; ஆட்சி மாற்றம் வந்ததும், 2012ல் பதவி
விலகினார்.
பின், 2012 ஜனவரியில், ஓய்வு பெற்ற நீதிபதி
சிங்காரவேலு, கல்விக் கட்டண கமிட்டி தலைவரானார்; மூன்று ஆண்டுகளாக
பொறுப்பில் இருந்த அவர், 2015 டிசம்பர் 31ல் ஓய்வு பெற்றார்.
அவரை தொடர்ந்து, கமிட்டியின் சிறப்பு சட்ட
அதிகாரி மனோகரனும், கடந்த மார்ச்சில் ஓய்வு பெற்றார். அதனால், கட்டண
கமிட்டியின் பணிகள் முடங்கின. இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி
வெளியானது. அதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டண கமிட்டி தலைவரை
நியமிக்காமல், இனியும் தாமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியது. மூன்று
வாரங்களில் தலைவரை நியமிப்பதாக, தமிழக அரசு உறுதி அளித்தது.
முன்னாள் நீதிபதிகள் : இதையடுத்து,
பள்ளிக்கல்வி, சட்டத்துறை இணைந்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில்
ஈடுபட்டுள்ளன. 'ஏற்கனவே தலைவராக பதவி வகித்த சிங்காரவேலு உள்ளிட்ட முன்னாள்
நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை
முன்னாள் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அடுத்த வாரம், தலைவர்
நியமிக்கப்பட்டு விடுவார்' என்று, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...