Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

செயற்கைக்கோள்களை முதல் முறையாக இரு வேறு சுற்றுவட்டப் பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது.

தட்பவெப்பநிலை ஆராய்ச்சிக்கு உதவும் ஸ்கேட்சாட்-1 செயற்கைக்கோள் மற்றும் 7 துணை செயற்கைக் கோள்களுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி திங்கள்கிழமை காலை 9.12 மணிக்கு ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

விண்ணில் பாய்ந்து 4 நிலைகளை வெற்றிகரமாக கடந்த பின்னர் 9.24 மணிக்கு ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

ராக்கெட் ஏவப்பட்ட 17-ஆவது நிமிஷத்தில், அதாவது காலை 9.29 மணிக்கு நிர்ணயிக்கப்பட்ட முதல் இலக்கை ராக்கெட் எட்டியது. உடனடியாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

371 கிலோ எடை: ராக்கெட் முதல் இலக்கான பூமியிலிருந்து 730 கி.மீ. தொலைவை எட்டியதும், உடனடியாக அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 8 செயற்கைக்கோள்களில் 371 கிலோ எடை கொண்ட ஸ்கேட்சாட்-1 செயற்கைக்கோள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு, காலை 9.31 மணிக்கு திட்டமிட்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பின்னர், அடுத்த சுற்றுவட்டப் பாதைக்கு ராக்கெட்டைச் செலுத்துவதற்காக அதன் இன்ஜின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, கீழே இறக்கப்பட்டு பின்னர் மீண்டும் இன்ஜின் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
சுமார் 2 மணி 13 நிமிஷங்கள் பயணத்துக்குப் பிறகு, அதாவது காலை 11.25 மணிக்கு இரண்டாவது இலக்கான பூமியிலிருந்து 689 கி.மீ. தொலைவை ராக்கெட் வந்தடைந்தது. இந்த இரண்டாவது இலக்கை எட்டியதும், ராக்கெட்டில் இணைக்கப்பட்டிருந்த அல்சேட்-1என், என்.எல்.எஸ்.-19, பிரதாம், பி.ஐ.சாட், அல்சாட்-1பி, அல்சாட்-2பி, பாத்ஃபாண்டர்-1 ஆகிய செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்து தனியாகப் பிரிக்கப்பட்டு திட்டமிட்ட துருவ சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

திட்டம் முழுமையாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 8 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருப்பது இஸ்ரோவின் மிகப் பெரிய வெற்றி. இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஸ்கேட்சாட்-1 செயற்கைக்கோள் தட்பவெப்பநிலை, உள்ளிட்ட தகவல்களை அனுப்பும்.

மிக நீண்ட 2 மணி நேர ராக்கெட் பயணத் திட்டம் முழுமையாக வெற்றியடைந்திருக்கிறது என்றார் கிரண்குமார்.
இன்றைய தினம் மிக நீண்ட ராக்கெட் பயணத் திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்திருக்கிறது. தொடர்ந்து ராக்கெட் பயண நேரத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொள்ளும். அடுத்ததாக இந்த ஆண்டு இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. மாக்3 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது என விஞ்ஞானி சிவன் கூறினார்.

என்னென்ன பயன்கள்?

ஸ்கேட்சாட்-1
இது இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ள இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.
ஏற்கெனவே, 2009 இல் அனுப்பப்பட்ட ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள் திட்டத்தின் தொடர்ச்சியாக, நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதுதான் ஸ்கேட்சாட்-1 செயற்கைக்கோள்.
இது தட்பவெப்பநிலை ஆராய்ச்சிக்கும், துல்லியமான வானிலை முன்னறிவுப்பு, கடலில் புயல் சின்னம் உருவாவதைக் கண்டுபிடிப்பதற்கும் பயன்படும். இதன் எடை 371 கிலோ.

அல்சாட்-1பி
இது அல்ஜீரியா நாட்டு செயற்கைக்கோள். அந்நாட்டு புவி சுற்றுச்சூழல், இயற்கைப் பேரிடர், வேளாண் குறித்த ஆய்வுக்காகவும், கண்காணிப்புக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் எடை 103 கிலோ.

அல்சாட்-2பி
அல்ஜீரியாவின் புவி பரப்பை துல்லியமாக படம் பிடித்து அனுப்புவதற்காக அனுப்பப்பட்டுள்ள, அந்நாட்டின் செயற்கைக்கோள். இதன் எடை 117 கிலோ.

அல்சாட்-1என்
இதுவும் அல்ஜீரியா நாட்டின் செயற்கைக்கோள். அந்நாட்டு ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் எடை 7 கிலோ.

பாத்ஃபைன்டர்-1
இது அமெரிக்க நாட்டு செயற்கைக்கோள். விண்வெளியில் மிகத் துல்லியமாக படங்களைப் பிடித்து அமெரிக்காவுக்கு தகவல்களை அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் எடை 44 கிலோ.

என்.எல்.எஸ்.19
இது கனடா நாட்டு செயற்கைக்கோள். விண்வெளியில் செயற்கைக்கோள் கழிவுகளை குறைக்க உதவும் வகையில், வணிக ரீதியில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் பணிக்காகவும் அந்நாட்டின் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. இதன் எடை 8 கிலோ.

பிரதாம்
இகு மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள். இது பூமியில் உள்ள மொத்த எலெக்ட்ரான் எண்ணிக்கையை (டிஇசி) கணக்கிடும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் எடை 10 கிலோ.

பைசாட்
இது பெங்களூர் பிஇஎஸ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. ரிமோட் சென்ஸிங் தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதன் எடை 5.25 கிலோ.
முதல் முறைஒரு ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் சூரிய சுற்றுவட்டப் பாதை, துருவ சுற்றுவட்டப் பாதை என இரண்டு சுற்றுப் பாதைகளில் இந்தியா சார்பில் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது இஸ்ரோ விஞ்ஞானிகளின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்த வெற்றியை விஞ்ஞானிகள் ஒருவருகொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.

பொதுவாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளின் பயண நேரம் 20 நிமிஷங்கள் என்ற அளவிலேயே இருக்கும். ஆனால், இம்முறை செயற்கைக்கோள்களை இரு துருவ வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தியதால் இந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2 மணி 15 நிமிடங்கள் பயணம் செய்தது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கடந்த 15-ஆம் தேதி 5 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி, இரு வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive