சட்டசபையில் இன்று பொதுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ‘’கடந்த 25.7.16
அன்று சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்
தொடர்ந்து விடுமுறை போக 22 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்திருக்கிறது.
இதில்
ஆளும்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள்.
வாய்ப்பு கிடைத்த நேரத்தில் மக்கள் பிரச்சனைகளை நாங்கள் தெளிவாக எடுத்து
வைத்திருக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்காத நேரத்தில்
நாங்கள் வெளிநடப்பு செய்து எங்கள் கருத்துக்களை மக்களுக்கு
தெரிவித்திருக்கிறோம்.
மீண்டும் சபைக்கு வந்து மக்கள் பிரச்சனைகளை பேசி இருக்கிறோம். காரசார
விவாதங்கள் நடைபெற்றிக்கின்றன. தனிப்பட்ட விஷயங்களை பேசுவதில் எங்களுக்கு
உடன்பாடு இல்லை. அமைச்சர்கள் குறுக்கீடு செய்வதும் விளக்கம் அளிப்பதும்
இவர்கள் உரிமை. என்றாலும் எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் தந்திருந்தால்
அரசுக்கு பயன்தரும் மக்கள் பிரச்சனைகளை பேசி இருப்போம்.
இந்த முறை அதிக வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காவிட்டாலும், அடுத்து நடைபெறும்
சட்டமன்ற கூட்டத்தில் எங்களுக்கு அதிக வாய்ப்பு தரவேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் மக்கள்
நலனுக்காகவே உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு வருகிறார்கள். இருதரப்பு
உறுப்பினர்களும் சேர்ந்து மக்களுக்கு நல்லவற்றை செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும்
என்று முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அதை எங்கள் கட்சி
துணைத்தலைவர் ஆதரித்து பேசினார். மாநில அரசுக்குரிய உரிமைகளை மத்திய அரசு
எடுத்துக்கொள்ள கூடாது என்ற முதலமைச்சரின் கருத்தை நாங்களும் ஏற்கிறோம்.
தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது.
மாநில அரசின் ஆலோசனையுடன் புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும் என்பதில்
எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.
தமிழ்நாட்டில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி மனித உரிமை ஆணையம் கருத்து
தெரிவித்து உள்ளது. இனி தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல் நடைபெறாமல் அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்கள் முகாம்களில் அடிப்படை
வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்
ஓய்வூதியத்தை பழைய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ள 7-வது சம்பள கமிஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். லோக் ஆயுக்தா
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். விஜிலென்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்பு
துறைக்கு உயர் அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் 84 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள்
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை நம்பி காத்திருக்கிறார்கள்.
எனவே இந்த தேர்வாணையத்தில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் வெளிப்படையான
முறையில் நியமிக்கப்பட வேண்டும்.
11 லட்சம் கோடி முதலீட்டை எதிர்பார்க்கும் தொலைநோக்கு திட்டம் 2023 முறையாக
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாநில திட்டக் குழுவுக்கு துணைத் தலைவர்
பதவி காலியாக உள்ளது. அதை நியமிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மாநில தகவல்
உரிமை சட்ட ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து
தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவற்றை வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்’’என்று பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...