தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் வியாழக்கிழமை முடிவில் 1,331 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
கூடுதல் 593 இடங்கள்: 2 புதிய மருத்துவக் கல்லூரிகளும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் 5 கல்லூரிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி கிடைத்துள்ளதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு அட்டவணையில் புதன்கிழமை இணைக்கப்பட்டன.
இந்த நிலையில் வியாழக்கிழமை கலந்தாய்வில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி ஒன்றிலிருந்து 30 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனால் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்த அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 1,305-ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முடிவில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 இடங்களும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்களும் காலியாக உள்ளன. அதே போன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 164 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,159 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 1,331 இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து செப்டம்பர் 24-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
வங்கி விடுமுறை காரணமாக... காலியாக உள்ள இடங்களுக்கு தொடர்ந்து சனிக்கிழமை (செப்.24) வரை கலந்தாய்வு நடைபெறும். இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "செப்டம்பர் 24-ஆம் தேதி 4-ஆவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறையாகும். எனவே, அன்றைய தினம் கலந்தாய்வில் பங்கேற்க இருப்போர் வெள்ளிக்கிழமையே (செப்.23) வங்கிகளில் வரைவோலையை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் ஜி.செல்வராஜன் கூறுகையில், "வரைவோலை எடுக்க முடியாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கும்பட்சத்தில், அந்த மாணவர்களிடம் வரைவோலைக்கான பணத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்டு ரசீது அளிக்கப்படும்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...