துப்புரவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி, சமூக சமத்துவ அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நிறுவனர், சிவகாமி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். சேலத்தில், சமூக சமத்துவ அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், நிறுவன தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: துப்புரவு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, வரும், நவ., 21ல், சேலத்தில், மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பள்ளி கல்வித் துறையில், ஆதிதிராவிடர்களுக்கென தனி கல்வி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு, 100க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். நில அபகரிப்பு தொடர்பாக, ஆதிதிராவிடர் புகார் கொடுத்தால், அவர்கள் மீதே, வழக்கு பதியும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.