Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்காக பள்ளிகளில் களமிறங்கும் அஞ்சல் ஊழியர்கள்!

         செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்காக திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் பள்ளிகள்தோறும் களமிறங்கி கணக்குகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இதுவரை 22 ஆயிரத்து 957 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
          பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்பு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காககொண்டுவரப்பட்ட திட்டங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் முக்கியமானதாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.1000 இந்தக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.1000இல் இருந்து அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை பணம் செலுத்தலாம்.

திட்டம் தொடங்கப்பட்டபோது ஆண்டுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இப்போது வட்டி விகிதம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. இக் கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தும் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வுத் தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும், பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும்போது அவரது கல்வி அல்லது திருமணச் செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. திருநெல்வேலி கோட்டத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்குகளை அதிகரிக்க ஏதுவாக பள்ளிகள்தோறும் அஞ்சல் ஊழியர்கள் சென்று சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறார்கள். பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டங்கள் நடைபெறும் நாள்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை பெற்றோர் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டால், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பாதுகாப்பாளர் மற்றும் பெற்றோரின் முகவரிச் சான்று ஆவண நகல்கள், தொகையை அந்தந்தப் பகுதி தபால்காரர்கள் மூலம் அஞ்சல்துறை சேகரித்து அவர்களது முகவரிக்கு கணக்குப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறது. இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

22 ஆயிரம் கணக்குகள் தொடக்கம்:

இதுகுறித்து திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.டி.சந்திரசேகர் கூறியதாவது: திருநெல்வேலி கோட்டத்தில் 3 தலைமை அஞ்சல் அலுவலகங்களும், 92 துணை அஞ்சல் அலுவலகங்களும், 234 கிளை அஞ்சல் அலுவலகங்களும் உள்ளன. இங்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது பள்ளிகள்தோறும் அஞ்சல் ஊழியர்களை அனுப்பி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனால் கணக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 957 கணக்குகள் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ரூ.24.84 கோடி வைப்புத்தொகை பெறப்பட்டுள்ளது.பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனளிக்கும் இத் திட்டம் குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.இதுதவிர அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஓய்வூதியம் பெறும் வகையில் கணக்குத் தொடங்கி அவர்களுக்கு வயதுக்குத் தகுந்தாற்போலமாதந்தோறும் ரூ.210 முதல் ரூ.1454 வரை செலுத்தி மாதம் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற முடியும்.மத்திய அரசின் தங்கப் பத்திர விற்பனையின்கீழ் இந்த அஞ்சல் கோட்டத்தில் 408 கிராம் தங்கம் விற்பனையாகியுள்ளது. விபத்துக் காப்பீடு, வங்கிச் சேவை வசதிகளும் அஞ்சல் துறையின் கீழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மாணவர்களைக் கவரும் "மை ஸ்டாம்ப்'

அஞ்சல் துறை சார்பில் அவரவர் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலைகளை விநியோகிக்கும் "மை ஸ்டாம்ப்' திட்டம் நடைமுறையில் உள்ளது.ரூ. 300 செலுத்தினால் தங்களது புகைப்படத்துடன் கூடிய 6 அஞ்சல் தலைகளை மாணவர்கள், பொதுமக்கள் பெற முடியும். தனியார் நிறுவனங்கள் மொத்தமாக தங்களது நிறுவனப் படங்களுடன் 100 அஞ்சல் தலைகள் வரை பெறும்போது அதற்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகிறது."மை ஸ்டாம்ப்' திட்டம் மாணவர்களைக் கவரும் வகையில் உள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்காக பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் இந்த அஞ்சல் தலைகளைப் பெறவும் பலர் விண்ணப்பித்துச் செல்வதாக அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive