வாட்ஸ் அப் தன்னுடைய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் தனது
பயனாளிகளின் செல்பேசி எண்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளது. இதன்மூலம் வாட்ஸப்
பயனர்கள் இனி, ஃபேஸ்புக்கில் குறிப்பிடத்தக்க விளம்பரங்களை அதிக அளவில் காண
வேண்டி வரும்.
காரணம் என்ன?
இரு வருடங்களுக்கு முன்னால் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள்
கொடுத்து வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது ஃபேஸ்புக். அதே நேரத்தில் வாட்ஸ்
அப்பிடம் அதன் பயனர்களின் ப்ரைவஸியை மதிப்போம் என்று உறுதி
அளித்திருந்தது. ஆனால் வாட்ஸ் அப் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன்
நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த முடிவை எடுத்திருக்கிறது
ஃபேஸ்புக்.
இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள், சலுகைகள்,
செய்திகளை தனிநபர் பயனாளிக்கு அனுப்ப முடியும். அதே நேரம் பயனாளிகள் அவற்றை
பிளாக் செய்து கட்டுப்படுத்தவும் முடியும். வாட்ஸ் அப், வழக்கமான
விளம்பரங்களைத் தடை செய்யும் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.
அதே நேரம் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் செல்பேசி எண்களை
ஆன்லைனில் பதிவிடாது எனவும், விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் எண்கள்
பகிரப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று (வியாழக் கிழமை) தனது நிறுவனத்தின் ப்ரைவஸி கொள்கை
மற்றும் சேவை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ள வாட்ஸ் அப், பயனர்கள் அதைக்
கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்
முன்னதாக 2012-ல் (ஃபேஸ்புக்குடன் இணைவதற்கு முன்பாக) சேவை விதிமுறைகளை
வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக்குடன் இணைந்து இரண்டு
கணக்குகளையும் ஒருங்கிணைக்க உள்ளது. இதன்மூலம் வாட்ஸ் அப் பயனர்களின்
தொலைபேசி எண்கள், பயன்படுத்தும் சாதனம் குறித்த தகவல்கள், இயங்குபொருள்
(OS) வகைப்பாடு, ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.
ஃபேஸ்புக்கின் யுக்தி
ஃபேஸ்புக் பயனர்களில் பலரே, தங்களின் செல்பேசி
எண்ணைக்கொண்டுதானே கணக்கைத் தொடங்கியிருப்பர். அவற்றைப் பயன்படுத்திக்
கொள்ளலாமே என்ற கேள்வி எழலாம். செல்பேசி மூலம் ஃபேஸ்புக் கணக்கைத்
தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுதும் அவற்றைப் பயன்படுத்துவதில்லை.
ஆனால் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த தற்போதைய எண்ணையே அவர்கள் கொடுக்க
வேண்டும். இதனால் வாட்ஸ் அப்பின் தகவல்கள் ஃபேஸ்புக்குக்கு முக்கியமானவை.
வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள்
யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தியபோது அனைத்து
ப்ரைவஸி அமைப்புகளும் அதை வரவேற்றன. அதைத்தொடர்ந்து என்க்ரிப்ஷன் முறை
இதிலும் தொடரும் என்று வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.
இந்த கணக்குகள் ஒருங்கிணைப்பு, தனிநபர் உரிமையைப் பாதிப்பதாக
குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வாட்ஸ் அப், தற்போதைய பயனாளிக்கு புதிய
கொள்கையை ஒத்துக்கொள்ளவோ அல்லது சேவைப் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளவோ ஒரு
மாத அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட பிறகு, உங்களது வாட்ஸ் அப்
மெசஞ்சருக்கு சென்று 'செட்டிங்ஸ்' கிளிக் செய்து 'அக்கவுன்ட்'-ல் உள்ள
'பிரைவஸி' ஆப்ஷனுக்குள் நுழைந்தால் கடைசியாக ஃபேஸ்புக் இணைப்பு குறித்த
பகுதி இருக்கும். அதில், டிக் ஆப்ஷனை நீக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...