கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) சேவையை இனி கல்வி விஷயங்களுக்கு மட்டுமே
மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து முதலாம் ஆண்டு வகுப்புகள்
திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன்,
கிண்டி பொறியியல் கல்லூரி டீன் நாராயணசாமி ஆகியோர் கூறியது:-
கல்லூரிகள் தொடங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
இணையதளம், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்களை கல்வி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
வகுப்புகளுக்குச் செல்லும்போது மட்டும் செல்லிடபேசியைக் கட்டாயம்
"சுவிட்ச்-ஆஃப்' செய்துவிடவேண்டும்.
பல்கலைக்கழக வளாகத்தில் ராகிங் கட்டுப்படுத்துவதற்காக, ராகிங் தடுப்பு
விழிப்புணர்வு வாகனம் நிறுத்தப்படும். பேருந்து நிலையங்கள், மாணவர்
விடுதிகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முதுநிலை பேராசிரியர்கள்
தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.
ராகிங்கில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அனைத்து மாணவர்களின் பெற்றோரிடமும் உத்தரவாதமும் பெறப்பட்டுள்ளது.
இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதமும், சிறைத்
தண்டனையும் அளிக்க சட்டம் வழி செய்கிறது. இதுமட்டுமின்றி, அவர்கள் வேறு
எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியாத வகையில் நடவடிக்கையும் எடுக்கப்படும்
என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...