'அங்கன்வாடி மையங்களில் பயின்ற
குழந்தைகளுக்கு, இனி, டி.சி., எனப்படும் கல்வி மாற்று சான்றிதழ்
வழங்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.
சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவுத்
திட்டத் துறை மானிய கோரிக்கை மீதான விவாத்திற்கு, பதில் அளித்து, அவர்
கூறியதாவது: தமிழகத்தில், ஏழு கூர்நோக்கு இல்லங்கள் மற்றும், இரண்டு
சிறப்பு இல்லங்கள் செயல்படுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை உறுதி
செய்யப்படும் இளைஞர்கள், சிறப்பு இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அவர்களை, சமூகத்தில் நல்ல குடிமகன்களாக மாற்ற, 16.20 லட்சம் ரூபாய்
செலவில், இனி, 'கவுன்சிலிங்' வழங்கப்படும். தமிழகத்தில், 54 ஆயிரத்து, 439
அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் பயிலும் குழந்தைகள், ஆரம்ப
கல்விக்காக, வேறு பள்ளிக்குச் செல்லும்போது, மாற்று சான்றிதழ் வழங்க,
பெற்றோர் கோருகின்றனர். எனவே, இந்நிதியாண்டு முதல், இரண்டு லட்சம்
குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும், முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும்
திட்டம், 20 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும். கொடும் குற்றங்களில்
ஈடுபட்ட, 16 முதல், 18 வயதிற்கு உட்பட்டவர்களை தங்க வைக்க, வேலுாரில், 42
லட்சம் ரூபாயில் பாதுகாப்பு மையம்
அமைக்கப்படும். சென்னை, ராயபுரத்தில் உள்ள
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் வரவேற்பு மையத்தில், அனைத்து உட்கட்டமைப்பு
வசதிகளுடன், ஒரு கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்படும். இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...