சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்கு, தரமான ஆசிரியர்கள் இல்லாததே முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். இதே நிலை நீடித்தால், மாணவர் சேர்க்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாகவே இருக்கின்றன.
2014-15-ஆம் கல்வியாண்டில் 546 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 2,78,862 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,54,265 இடங்கள் நிரம்பின. 1,24,597 இடங்கள் காலியாக இருந்தன.
2015-16-ஆம் கல்வியாண்டில் 553 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 2,75,561 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,56,868 இடங்கள் நிரம்பின. 1,18,693 இடங்கள் காலியாக இருந்தன.
2016-17-ஆம் கல்வியாண்டுக்கான இந்த முழுமையான விவரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் மட்டும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் ஒரு லட்சம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. எனவே, நிகழாண்டும் இதே நிலைதான் நீடிக்கும் என்கின்றனர் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்.
இந்த மோசமான நிலைக்குத் தரமான பேராசிரியர்கள் பற்றாக்குறையே முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியது: பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. அதனால்தான், பி.இ. படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தேவையில் 45 சதவீதம் தமிழகத்தில் குறிப்பாக, சென்னையில்தான் உற்பத்தியாகிறது. அந்த அளவுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இதேபோல, ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளன.
எனவே, தேவை உள்ளது. ஆனால், தரமான பொறியியல் பட்டதாரிகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஓராண்டு கட்டாயப் பயிற்சி: கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் இருந்தால்தான், தரமான பொறியாளர்களை உருவாக்க முடியும். பொறியியல் பேராசிரியருக்கான குறைந்தபட்சத் தகுதியாக எம்.இ. நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும்.
பள்ளி ஆசிரியர் பணிக்கு பி.எட். தகுதி கட்டாயம் என்பது போல, பொறியியல் பேராசிரியர் பணிக்கு எம்.இ. முடித்த பின்னர் ஓராண்டு ஆசிரியர் பயிற்சி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றார் அவர்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தென் மண்டலத் தலைவர் ஆர். ருத்ரமூர்த்தி: பொறியியலில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பி.இ. முடித்தவுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பிற பொறியியல் நிறுவனங்களுக்கு பணிக்குச் சென்று விடுகின்றனர். முதுநிலை பொறியியல் (எம்.இ.) படிப்பின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் எம்.இ. சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
ஊதிய உயர்வு அவசியம்: இதற்கு, பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் மிகக் குறைந்த ஊதியமே முக்கியக் காரணம். ஒரு சில சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் மட்டுமே ஏஐசிடிஇ நிர்ணயித்துள்ள வழிகாட்டுதலின்படி ஊதியம் வழங்குகின்றன. பெரும்பாலனவை வழங்குவதில்லை. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்வதற்கு, முதலில் பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும். அப்போதுதான், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் பணி மீது ஆர்வம் ஏற்படும். அதன்மூலம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் தரமான கல்வி வழங்க முடியும்.
இதேபோல, எம்.இ. படிப்பில் அதிக மாணவர்கள் சேருவதை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் கல்வி உதவித் தொகைத் திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...