ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்தார்.
காலிறுதியில் சாக்ஷி மாலிக் மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தினார்.
இந்தச் சிலிர்ப்பூட்டும் ஆட்டத்தில், முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்ஷி பின் தங்கியிருந்தார். மீண்டு எழுந்த அவர் பின்னர் தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்
ஆட்டநேரம் முடிய சில நொடிகளே இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் எடுத்த மூன்று புள்ளிகளே 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வெல்ல காரணமாக இருந்தது.
முன்னதாக, மங்கோலிய வீராங்கனை ஆர்கோன் என்பவரை 12-3 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தியதன் மூலம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியில் அவர் விளையாடிய விதமே எதிர்பார்ப்புகளை எகிறவைத்தது.
ஆரம்ப சுற்றுகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய சாக்ஷி, காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் வெலேரியா கோப்லோவாவிடம் 9-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், வெண்கலத்துக்கான சுற்றுகளில் அசத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
ரியோ ஒலிம்பிக் தொடங்கி 12 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவின் பதக்க தாகத்தை சாக்ஷி தீர்த்து வைத்துள்ளது மகிழ்வுக்குரியது.
சாக்ஷி மாலிக்: ஹரியாணாவில் இருந்து ரியோ வரை:
ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்த ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் புதன்கிழமை ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
அதேபோல், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக, யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றவர்கள் ஆவர்.
2002-ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற சாக்ஷிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றி பெற்ற சாக்ஷிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete