மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக்
கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம்
துணைத் தலைவர் பொன்.வீரசிவாஜி தலைமையில் நாமக்கல்லில் வியாழக்கிழமை
நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் க.செல்வராஜூ, மாவட்டச் செயலர்
ரா.செல்வக்குமார் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கென
தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும். பணி
நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை
ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு
முடிந்தவுடன் ஏற்படும் காலி இடங்களில் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியத்திலேயே
மீண்டும் பணி வழங்க வேண்டும்.
ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்
கொண்டு இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் ஒருவர் மாற்றுப்
பணியில் வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறார்.
இச் செயல் இத்தகைய பள்ளிகளை மூடும் முயற்சியாகும். இதனால் ஒரு பள்ளிக்கு
கட்டாயம் 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்.
பள்ளிக் குழந்தையின் பெற்றோர் விபத்தினால் இறந்தால் தமிழக அரசு ரூ.75,000
உதவித்தொகை வழங்குகிறது. விபத்து மட்டுமல்லாது, வேறு காரணத்தினால் வருவாய்
ஈட்டும் பெற்றோர் இறந்தாலும் அத்தகைய குழந்தைக்கும் உதவித்தொகை கிடைத்திட
அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில்
ஏற்படும் காலி இடங்களில் அந்தந்த ஒன்றியங்களில் பணியாற்றும் தகுதியான
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து பட்டதாரி ஆசிரியர்களாக
நியமிக்க வேண்டும்.
வாக்காளர் சேர்க்கை, நீக்கல் பணி தொடர் பணியாக உள்ளதால், ஆசிரியர்களின்
கல்விப் பணி பாதிப்படைகிறது. இதனால் இப் பணிக்கு தனி அலுவலர்களை நியமிக்க
வேண்டும். அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், ஆசிரியரின்
பெற்றோர் பலன் பெறும் வகையில் நடைமுறை இல்லை. இதனை மாற்றி பெற்றோருக்கும்
பலன் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...