பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும்,
தேர்வு முறையை மாற்றவும், தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
'இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில்,
தமிழ் மாணவர்கள் சேர்வது நிஜமாகாத கனவா' என்ற தலைப்பில், விடியல்
அறக்கட்டளை மற்றும், 'தி டான் கல்ச்சுரல் அண்ட் சோஷியல் அசோசியேஷன்'
சார்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, விடியல் அறக்கட்டளை தலைவர் எஸ்.ஜெகதீசன்:
தமிழக மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் அதிக
எண்ணிக்கையில் சேர முடியவில்லை என்பதை, கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போது, ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுடன், 'நீட்'
எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வும் கட்டாயமாகி விட்டது. இதை, நம்
மாணவர்கள் எதிர்கொண்டு, வெற்றி பெறும் வகையில், பள்ளிக் கல்வியில் மாற்றம்
தேவை.
இலவசங்களை அரசு கொடுப்பது போல், பாடத்திட்ட
மாற்றம், தேர்வு முறை மாற்றத்திலும், கவனம் செலுத்த வேண்டும். லஞ்சம்
கொடுக்கும் ஆசிரியராக இருந்தால், அவருக்கு பாடம் நடத்த தெரியாது;
அப்படிப்பட்டவர்களை, ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
பாரத் பல்கலை துணை வேந்தர் எம்.பொன்னவைக்கோ:
ஐ.ஐ.டி., எதற்கு துவங்கப்பட்டதோ, அதன்படி செயல்படவில்லை. ஐ.ஐ.டி.,யில்
படித்தவர்கள், வெளிநாடு செல்கின்றனரே தவிர, இங்கே கல்வி நிறுவனங்களோ,
தொழில் நிறுவனங்களோ துவங்கவில்லை. ஐ.ஐ.டி.,யில், தமிழக மாணவர்கள் சேர
முடியாததற்கு, பள்ளிக் கல்வியின் தரம் அதிகரிக்காததே காரணம்.
ஆசிரியர்களின் விகிதாச்சாரம் நிர்ணயிக்கும்
முறை சரியில்லை. அடிப்படை கல்வி மோசமாக உள்ளது. சிறந்த ஆசிரியர்களின்
எண்ணிக்கை குறைவு. இதை போக்க, பாடத்திட்ட மாற்றம், கல்வி முறை மாற்றத்தை,
அரசு கொண்டு வர வேண்டும்
.
கல்வியாளர் ரமேஷ் பிரபா: இந்தியாவில் உள்ள,
22 ஐ.ஐ.டி.,க்களிலும், இந்தி பேசும் வட மாநில மக்களின் ஆதிக்கம் அதிகம்.
சி.பி.எஸ்.இ., மாணவர்கள், 55 சதவீதம் பேர், இந்த ஆண்டு, ஐ.ஐ.டி.,யில்
சேர்ந்துஉள்ளனர்; மீதம், 45 சதவீதம் பேர் தான், மாநில பாடத்திட்டத்தில்
படித்தவர்கள். அதேபோல், 75 சதவீதம் நகர்ப்புற மாணவர்களே, ஐ.ஐ.டி.,யில்
சேர்கின்றனர்; அதில், 34 சதவீதம் அரசு ஊழியர்களின் பிள்ளைகள்; 19 சதவீதம்
தொழிலதிபர்களின் வாரிசுகள்.
இதில், தமிழக மாணவர்கள்
பின்தங்கியிருப்பதற்கு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ.,
நடத்துவதும், அதை ஆங்கிலத்துடன் இந்தியில் எழுத அனுமதித்து இருப்பதும்,
முக்கிய காரணம்; இவற்றில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள்
பேசினர்.
பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குனர்
எஸ்.பரமசிவன்: சி.பி.எஸ்.இ.,யை விட, தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் எந்த
விதத்திலும் குறைந்ததல்ல. நம் மாணவர்களின் திறனை, சரியாக நாம் வெளியே
கொண்டு வரவில்லை. தமிழக தேர்வு முறையிலும், வினாத்தாள் தயாரிப்பிலும்
மாற்றம் வர வேண்டும். தற்போதுள்ள தமிழக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்,
2006ல் அமலுக்கு வந்தது. இந்த, 10 ஆண்டுகளில் எவ்வளவோ தொழில்நுட்ப
முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் மாறாமல் இருப்பதால், நம்
மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் பின்தங்குகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...