அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருவித
செறிவூட்டப்பட்ட அயோடின் உப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தொழில் துறை
அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
அம்மா சிமென்ட் திட்டத்தை மேம்படுத்தும்
வகையில், ரூ.1 கோடி செலவில் நேரடிப் பதிவு -கண்காணிக்கும் முறை, தமிழ்நாடு
சிமென்ட் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், சிமென்ட்
திட்டத்தைத் திறம்பட கண்காணிக்க மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு 65
கையடக்கக் கணினிகள் வழங்கப்படும்.
உப்பு இலவசம்: பொதுமக்களிடையே அயோடின்,
இரும்பு ஆகிய நுண்ணூட்டச் சத்துகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்த, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இருவித
செறிவூட்டப்பட்ட உப்பு இலவசமாக வழங்கப்படும்.
கனிம குத்தகை உரிமம்:
கனிம குத்தகை உரிமம் வழங்கும் முறையை
எளிதாக்கும் வகையில், இணையவழி சுரங்க குத்தகைப் பதிவேடு அரியலூர்,
கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்
செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் 960 பெருங்கனிம குத்தகைகளும்,
836 கிரானைட் குத்தகைகளும், 3,290 இதர சிறு கனிம குத்தகைகளும் உள்ளன.
குத்தகைதாரர் உரிய தொகையைச் செலுத்தி விண்ணப்பிக்கும் நிலையில், மாவட்ட
அலுவலர்களால் கனிமங்களை எடுத்துச் செல்ல நடைச் சீட்டு இப்போது வழங்கப்பட்டு
வருகிறது.
இதனை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி
கனிம அனுமதிச் சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும். மணலியில் உள்ள டாமின்
கிரானைட் கற்பலகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை நவீனப்படுத்தப்படும்.
பிரத்யேகமான நினைவுச் சின்னங்கள், தடிமனான கற்பலகைகள் தயாரிக்கும்
தொழிற்சாலையாக அது மாற்றப்படும்.
விருத்தாசலத்திலுள்ள சிமென்ட் நிறுவனத்தின்
கற்குழாய் ஆலை விரிவாக்கம், ஆலங்குளத்தில் உள்ள கல்நார் தகடு ஆலையை
சுடுசெங்கல் உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்றுவது, கோவை, திருப்பூர்
மாவட்டங்களில் டான்செம் நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடங்களில் சூரிய
மின் உற்பத்தி நிலையம் அமைப்பது போன்றவற்றுக்கான சாத்தியக் கூறுகள்
ஆராயப்படும் என்று அமைச்சர் சம்பத் அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...