தட்பவெப்பம் முதல் வாழ்க்கைச் சூழல் வரை
சமவெளிப் பகுதிகளைவிட மலைப் பகுதிகள் வித்தியாசமானவையாகும்.
இதன்
காரணமாகவே, தமிழகத்தின் அனைத்து மலைப் பகுதிகளிலும் அரசின் சார்பில்
விலையில்லா மின் விசிறிக்குப் பதிலாக மின்காந்த அடுப்பு வழங்கப்பட்டது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு உல்லன் வெம்மை ஆடை
வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் உள்ள
பள்ளிக் குழந்தைகள் பள்ளி முடிந்ததும் அவரவர் வீடுகளுக்குச் செல்வதற்கு
குறைந்தபட்சத் தொலைவுக்காவது நடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தக் குழந்தைகள்
மழைக் காலங்களில் பெரிதும் அவதிப்படுகின்றனர். கையில் குடை இருந்தாலும்,
வீசும் பலத்த காற்றுக்கு அது பயனில்லாமல் போய்விடுகிறது. அதேபோல, வெம்மை
ஆடைகள் இருந்தாலும் அவை மழையில் நனைந்து விடுவதாலும், காலில்
செருப்பிருந்தாலும் கால்கள் மழை நீரில் ஊறிவிடுவதாலும் பள்ளிக் குழந்தைகள்
அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர்.
வெம்மை ஆடைத் திட்டத்தின் கீழ், நீலகிரி
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 720 பள்ளிகளில் பயிலும்
மாணவ, மாணவிகளில் 2014-15ஆம் ஆண்டில் 16,439 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக
மட்டும் ரூ. 66 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதேபோல, 2015-16ஆம் ஆண்டில்
18,439 பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ. 74 லட்சம் மதிப்பிலான வெம்மை ஆடைகள்
வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை எப்போது
காலநிலை மாறும், எப்போது மழை பெய்யும் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை.
இந்த நிலையில், தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா காலணி வழங்கும்
திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும், செருப்புக்கு பதில் ஷூக்கள்
வழங்கினால் மாணவ, மாணவிகள் மழை நீரில் நடப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
இதேபோல, வெம்மை ஆடைகளுக்கு மேல் அவர்கள் அணிந்து கொள்ளும் வகையில் மழை
கோட்டுகளும் வழங்கினால் குழந்தைகள் மழையில் பாதிக்கப்படுவதும் வெகுவாகக்
குறையும்.
உதகை, கோத்தகிரி போன்ற மலைப் பகுதிகளில்
பெரும்பாலான மாணவர்கள் காலில் ஷூ அணிந்திருந்தாலும், கூடலூர், பந்தலூர்
போன்ற பகுதிகளில் பொதுமக்கள் ஷூக்களுக்கு பதிலாக செருப்பையே அதிக அளவில்
பயன்படுத்துகின்றனர். இதனால், பள்ளிக் குழந்தைகளுக்கும் செருப்புகளையே
வாங்குகின்றனர். இதை மாற்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஷூக்கள்
கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தின் மீது தனி அக்கறை
கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, எவ்வாறு வெம்மை ஆடைகளையும், மின்காந்த
அடுப்புகளையும் நீலகிரிக்குப் பிரத்யேகமாக வழங்கினாரோ அதைப்போலவே பள்ளிக்
குழந்தைகளின் நலனுக்காக மழை கோட்டுகளையும், ஷூக்களையும் வழங்கி உதவ
வேண்டும் என்பதே இந்த மாவட்ட மக்களின் கோரிக்கையாகும்.
இதுகுறித்து கூடலூரைச் சேர்ந்த மருத்துவர் சுகுமாரன் கூறியதாவது:
மாவட்டத்திலேயே கூடலூர், பந்தலூர்
பகுதிகளில்தான் தென்மேற்குப் பருவ மழை அதிக அளவில் பெய்கிறது. கோடை
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் திடீரென ஏற்படும் இந்தக்
காலநிலை மாற்றத்தால் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு குளிர்
காய்ச்சல், டைபாய்டு, நிமோனியா போன்ற நோய்த் தாக்குதல்கள் ஏற்படுகின்றன.
இந்த பிரச்னை தொடர்ந்து 3 மாதங்களுக்கு நீடிப்பதால் அவர்கள் உடல் நலத்தைப்
பேணிக் காக்கும் வகையிலும், கால்களில் சூடான தன்மையை ஏற்படுத்தும்
வகையிலும் ஷூக்களையும், மழை கோட்டுகளையும் அரசே வழங்கினால் உதவியாக
இருக்கும் என்றார் அவர்.
இதுதொடர்பாக தமிழக விவசாய மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். செல்வராஜ் கூறியதாவது:
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெரும்பாலும்
கூலித் தொழிலாளர்களும், தோட்டத் தொழிலாளர்களும் அதிக அளவில் உள்ளதால்,
பள்ளி முடிந்தவுடன் குழந்தைகள் மழைக் காலங்களில் செருப்புடன் நடந்து
செல்வது சிரமமாக இருப்பதுடன், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடிக்கும்
வாய்ப்பும் உள்ளது. எனவே, குளிருக்காக மட்டுமன்றி, பாதுகாப்புக்
காரணங்களுக்காகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு
ஷூக்களையும், மழை கோட்டையும் வழங்குவதுடன், கூடுதலாக குடையும் வழங்கலாம்
என்றார் அவர்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே
கல்வித் துறையினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும்
தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரையிலும் எத்தகைய நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நிகழ் ஆண்டில், வடகிழக்குப் பருவமழைக்கு
முன்னர் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இந்தப் பகுதி
மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...