வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, "செட்'
தேர்வுக்கான விடைகள், விடைத் தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்
என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப்
பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை மத்திய
இடைநிலைக் கல்வி வாரியமும் (சி.பி.எஸ்.இ.), மாநில அளவில் "செட்' தேர்வும்
ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில்
"செட்' தேர்வு நடத்தும் அனுமதி கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா
பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்தது.
கடந்த பிப்ரவரி 21-இல் நடைபெற்ற "செட்' தேர்வை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
சர்ச்சையும், சந்தேகங்களும்...: இந்த
நிலையில், பணம் கொடுத்து "செட்' தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிகள்
நடைபெறுவதாக, பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யு.ஜி.சி.) புகார்கள்
தெரிவிக்கப்பட்டன.
இதுதவிர, "நெட்'தேர்வில் கேள்வித் தாளை
தேர்வர்களே எடுத்துச் செல்ல அனுமதியும், தேர்வு முடிந்து ஒரு வாரத்தில்
விடைகளும், தேர்வர்களின் விடைத்தாள் நகலும் சி.பி.எஸ்.இ.யின் இணையதளத்தில்
வெளியிடப்படும்.
இதனால், தேர்வர்கள் சுய பரிசோதனை
செய்துகொண்டு, திருத்தங்கள் இருந்தால் குறிப்பிட்ட நாளுக்குள் முறையிட்டு
நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
இந்த நடைமுறைகள் "செட்'தேர்வில் பின்பற்றப்படதாதல் தேர்வர்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.
நீதிமன்ற உத்தரவால் முடிவு வெளிவருமா?
சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசு பொறுப்பேற்று உயர்கல்வித்
துறை அமைச்சர், செயலர் மாற்றம், பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்
நியமனம் என்பன உள்ளிட்ட பல காரணங்களால் "செட்'தேர்வு முடிந்து 5 மாதங்கள்
ஆகிவிட்டபோதும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமலே இருந்து வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம்
மணலிக்கறையைச் சேர்ந்த எஸ். ஆண்டனி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, "செட்' தேர்வு முடிவுகளை 4
வாரங்களில் வெளியிட வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டிருக்கிறது.
இருந்தபோதும், முடிவு வெளியிடுவதற்கு
முன்பாக விடை, தேர்வர்களின் விடைத் தாள் நகல்களை வெளியிட வேண்டும் என்ற
எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
குறைகளை நிவர்த்தி செய்ய வாய்ப்பு தேவை: இதுகுறித்து செட் "நெட்' சங்க ஆலோசகர் எஸ்.சுவாமிநாதன் கூறியது-:
"நெட்' தேர்வுக்கு அனுமதி அளிக்கும்
யுஜிசியே "செட்' தேர்வை நடத்துவதற்கும் அனுமதி வழங்குகிறது. அப்படி
இருக்கும்போது, "நெட்' தேர்வு நடைமுறைகளை "செட்' தேர்வுக்கு பல்கலைக்கழகம்
பின்பற்ற தயக்கம் காட்டுவது ஏன்?
பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையிலும், முடிவுகள் அறிவிக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மையை
உறுதி செய்யும் வகையிலும் கேள்விகள், விடைகள், தேர்வர்களின் விடைத்தாள்
நகல்கள் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் உடனடியாக வெளியிட
வேண்டும். இதோடு, குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள தேர்வர்களுக்கு வாய்ப்பும்
அளிக்க வேண்டும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...