மழை காலம் துவங்குவதால், மின் விபத்தை
தடுக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, மின் வாரியம் முடிவு
செய்து உள்ளது.
சென்னையில் குறிப்பிட்ட சில இடங்கள் தவிர, மற்ற அனைத்து
பகுதிகளுக்கும், மின் கம்பம் மூலம், மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், மழை காலங்களில், காற்று பலமாக வீசும் போது, மின் கம்பம் சாய்வதால்,
மின் கம்பி கீழே அறுந்து விழுகிறது; கம்பியை மிதிப்பவர்கள், மின்சாரம்
தாக்கி உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், வரும் அக்டோபர் முதல், வட
கிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. அதனால், மின் விபத்தை தடுக்க, பள்ளிகளில்
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து
உள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர்
கூறியதாவது: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், கடந்த
ஆண்டு பெய்த கன மழையால், பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்து, மின்
கம்பிகள் அறுந்து விழுந்தன; சில இடங்களில், மின் விபத்துகளும் ஏற்பட்டன.
எனவே, மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பள்ளிகளில், மின்
விபத்தை தடுப்பது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
இதற்காக, பள்ளி கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளது; அவர்கள்
ஒப்புதல் கிடைத்ததும், பள்ளிகளில் விழிப்புணர்வு பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...