மலைப் பகுதிகளில் பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்தாவது அட்டவணைக்கான ஆதிவாசிகளின் பிரசாரக்
குழுவின் மாநில அமைப்பாளர் ரெங்கநாதன் கூறினார்.
சேலத்தில் சர்வதேச பழங்குடியினர் தின கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது. இதில், ஐந்தாவது அட்டவணைக்கான ஆதிவாசிகளின் பிரசாரக் குழுவின்
மாநில அமைப்பாளர் ரெங்கநாதன் கலந்துகொண்டு பேசியது: சர்வதேச ஆதிவாசிகள்
உடன்படிக்கை பிரிவு 14-இன் படி, ஆதிவாசி மக்கள் கல்வி நிறுவனங்கள்
அமைக்கவும், கட்டுப்பாடு செலுத்தவும், அவர்கள் சொந்த தாய்மொழி மற்றும்
கலாசார பண்புகளுடன் கற்றுக் கொடுப்பதற்கும் உரிமை உள்ளது எனக் கூறுகிறது.
மேலும், நிலைத்த வளர்ச்சிக்கான குறிக்கோள் அறிக்கையில், எல்லா நிலைகளிலும்
ஆதிவாசி மக்களுக்கு கல்வி மற்றும் தொழில்கல்வியின் சமத்துவத்தை
வலியுறுத்துகிறது. நடைமுறையில் கல்வி கிடைப்பதில் ஆதிவாசி மக்களுக்கும்,
ஆதிவாசி அல்லாத மக்களுக்குமான இடைவெளி மிகப்பெரிய அளவில் உள்ளது.
அனைத்து ஆதிவாசி மக்களுக்கும் கல்வி உரிமையை மத்திய, மாநில அரசுகள்
உத்தரவாதப்படுத்த வேண்டும். மலைப்பகுதிகளில் பள்ளிக்கு சரியாக வராத
ஆசிரியர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தீர்மானம் நிறைவேற்றம்:
ஆதிவாசி மற்றும் தலித் மக்களின் வளர்ச்சி நிதியை வேறு பணிகளுக்கு
செலவிடப்படுவதைத் தடுக்க ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் சட்டம்
கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திலும் நடப்புக் கூட்டத் தொடரிலேயே
அந்த சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
ஆதிவாசி மக்களின் நிலங்களை இதர மக்கள் வாங்குவதை தடை செய்ய மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் சட்டம் கொண்டு வர வேண்டும்.
ஆதிவாசிகள் வாழும் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி உரிமைச்
சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன
உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கருத்தரங்கில் சந்திரன்,
அசோகன், கஜேந்திரன், லீலாவதி, தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...