தகவல் உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி.ஐ),
தகவல்கள் கோரும் மனுக்களை தகவல் ஆணையத்திற்கு இணையம் மூலம் அனுப்பும்
திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த இணையதளச் சேவைக்காக, தகவல் ஆணையத்தில்
நவீன கணினி சாதனங்களை நிறுவுவதற்கான பணிகளை தகவல் தொழில் மேம்பாட்டுத்
திட்டத்தின் மூலம் ரூ. 30 லட்சத்தில் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
பொதுமக்களுக்கான நலத் திட்டங்கள், சலுகைகள்
ஆகியவற்றை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தவும், அதில் முறைகேடுகள்
நடைபெறைமல் இருப்பதை உறுதி செய்யவும் தகவல் உரிமைச் சட்டம் கொண்டு
வரப்பட்டது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த
தகவல்களை அறிந்துகொள்ள விரும்புவோர், தகவல் ஆணையத்தில் மனு அளித்தால்
குறிப்பிட்ட நாள்களுக்குள் மனுதாரர்களுக்குத் தேவையான தகவல்கள் அவர்களது
வீட்டுக்கே தேடி வரும்.
எனவே,பொதுமக்கள், அரசு அலுவலர்கள்
தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், அரசுத் துறைகளின்
செயல்பாடுகள், பிரச்னைகள் குறித்த தகவல்களை அறிய தகவல் ஆணையத்துக்கு
மனுக்களை அதிகளவில் அனுப்பி வருகின்றனர்.
இதுவரையில் அந்தந்தப் பகுதிகளில் இருந்து
உரிய அலுவலகங்களுக்கும், தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கும் மனுக்களை நேரிலோ
அல்லது அஞ்சல் மூலமோ மனுதாரர்கள் அனுப்பி வந்தனர். ஒவ்வொரு நாளும் 100
முதல் 130 மனுக்கள் வரையில் பெறப்படுகிறது. இதைப் பதிவு செய்து,
குறிப்பிட்ட நாள்களுக்குள் கடிதத்தை மனுதாரருக்கு அனுப்பிவைத்து
விசாரணையும் செய்யப்படுகிறது. இதனால், மனுதாரர்களுக்கு வீண் அலைச்சலுடன்
அதிகச் செலவும், தாமதமும் ஏற்பட்டு வந்தது.
இதைத் தவிர்க்கவும், மனுதாரர்களுக்கு
விரைவான சேவை கிடைக்கும் வகையிலும் தகவல் ஆணையம் நவீன இணையதளச் சேவைத்
திட்டத்தை விரைவில் செயல்படுத்தட உள்ளது. இதன்மூலம், அந்தந்தப் பகுதிகளில்
இருந்தே மனுதாரர்கள் இணையம் மூலம் மனுக்களை அனுப்பிவைக்க முடியும். இதனால்,
தேவையில்லாத அலைச்சலைத் தவிர்க்க முடியும்.
இதுகுறித்து தகவல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது தகவல் ஆணையத்துக்கு மனுதாரர்கள்
அனுப்பும் மேல்முறையீடு தொடர்பான மனுக்களை வரிசைப்படி பதிவு செய்து விசாரணை
செய்து வருகிறோம். இதுதொடர்பான தகவல்களை அஞ்சல் மூலம் அனுப்புவதால் தாமதம்
ஏற்படுகிறது. எனவே, மனுதாரர்களுக்கு விரைவான சேவை கிடைப்பதை உறுதி செய்ய,
இணையதளச் சேவைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என தகவல் ஆர்வலர்கள்
வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில், நவீன இணையதளச் சேவைத் திட்டம்
விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
இதேபோல, மனுக்கள் ஆணையத்துக்கு கிடைத்தது
குறித்த தகவல், விசாரணை செய்யும் நாள் குறித்தும் செல்லிடப்பேசியில் உடனே
குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இதைச் செயல்படுத்த
தகவல் ஆணையக் குழு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியது. அதை
ஏற்று, நவீன கணினி வசதிகளைச் செய்யவும், இணையதளச் சேவைத் திட்டத்தைச்
செயல்படுத்தவும் தகவல் மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ. 30 லட்சத்துக்கு
அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...