இந்திய துணைக் கண்டமானது 100 கோடி
ஆண்டுகளுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற
கருத்துக்கான ஆதாரத்தை புவியமைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில்
நிரூபித்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்
பூமியின் வெளிப்புற அடுக்குகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள்
இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொன்மையான பாறைகள் குறித்து
ஆய்வு நடத்தினர். அப்போது கண்டங்கள் உருவானது தொடர்பான முக்கிய விஷயங்களைக்
கண்டறிந்தனர்.
இது குறித்து இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கோரக்பூர்
ஐஐடி கல்வி நிறுவன பேராசிரியர் தேவாசிஸ் உபாத்யாயவும், ஸ்விட்சர்லாந்தின்
பெர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளாஸ் மெஸ்கரும் பிடிஐ செய்தி
நிறுவனத்திடம் கூறியதாவது:
அன்டார்க்டிகா கண்டமும் இந்திய துணைக் கண்டமும் ஒரு
காலத்தில் மிகப்பெரிய ஒரே கண்டமாக இணைந்திருந்தன என்றும் அவை 150 கோடி
ஆண்டுகளுக்கு முன் தனியாகப் பிரிந்தன என்றும் கூறப்பட்டு வந்த கருத்தை
எங்களால் முதல் முறையாக நிரூபிக்க முடிந்துள்ளது.
அதன் பின் இந்தியாவும் அன்டார்க்டிகாவும் ஒரு கடலால்
பிரிந்தன. இந்தக் கடலானது நிலப்பகுதியால் மீண்டும் மூடப்பட்டதால் இரு
கண்டங்களும் மீண்டும் ஒன்றிணைந்தன. அந்த கண்டங்களுக்கிடையே சுமார் நூறு
கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தியாவில் கிழக்குத்
தொடர்ச்சி மலைப்பகுதி உருவானது.
இரு கண்டங்களும் மீண்டும் ஒரு முறை பிரிந்து, பழைய கடல்
இருந்த இடத்தில் புதிதாக ஒரு கடல் உருவானது. அதன் பின் கண்டங்களின்
இயக்கத்தில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. சுமார் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்
அவை மீண்டும் மோதிக்கொண்டபோது மற்றொரு மலைத்தொடர் உருவானது.
தென்னிந்தியா வரையிலான கிழக்குத் தொடர்ச்சி மலை
மட்டுமின்றி இலங்கை, மடகாஸ்கர் வரை மலைத்தொடராக அது நீண்டது. அவை அனைத்தும்
அப்போது இந்திய துணைக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
அதன் பின் மீண்டும் இந்தியாவும் அன்டார்க்டிகாவும்
பிரிந்தன. அப்போது இரு கண்டங்களுக்கும் இடையே மிகப்பெரிய கடல் தோன்றியது.
அதன் பிறகும் இந்த இரு நிலப்பகுதிகளும் பல முறை இணைந்துள்ளன.
இவை அனைத்தும் பூமியில் மனிதகுலம் தோன்றுவதற்கு முன்
நடைபெற்றன. இதற்கான ஆதாரங்களை எங்கள் ஆய்வுக்குழு சிங்க்பூம்
மலைப்பகுதியிலும், ஒடிஸா மற்றும் ஜார்க்கண்டில் கிழக்குத்தொடர்ச்சி
மலைப்பகுதியிலும் சேகரித்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வுக் குழுவின் ஆய்வு முடிவுகள் சர்வதேச அறிவியல் பத்திரிகையான "எல்சீவியர்' இதழில் அண்மையில் வெளிவந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...