கடலுார் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த
கணக்கெடுப்பு பணியில் பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ,
மாணவியர் எண்ணிக்கை 819 என தெரியவந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்குச் செல்லாமலும், பள்ளியை விட்டு இடைநிற்பதுமாக உள்ளனர். இதனால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 6 வயது முதல், 15 வயது வரை பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ, மாணவியரைக் கண்டறிந்து வயதுக்கேற்ப அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு அனுப்ப ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு பணி கடலுார் மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட 2,833 குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது. இப்பணியில் 169 ஆசிரியர் பயிற்றுனர்கள், 75 சிறப்பு ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.செங்கல் சூளை, கட்டடப் பணி, சாலைப்பணி, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் என பல இடங்களில் நடந்த இப்பணியில் 465 மாணவர்கள், 354 மாணவியர் என மொத்தம் 819 பேர் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடைநின்றவர்கள் என கண்டறியப்பட்டது.இதில், 261 பேர் நேரடியாக அருகில் உள்ள பள்ளிகளிலும், 3கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளில் 150 பேரும் வயதுகேற்ப வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இது தவிர 354 பேருக்கு 18 சிறப்பு பயிற்சி மையங்களிலும், 54 பேருக்கு ஒரு சிறப்பு பயிற்சி உண்டு உறைவிடப் பள்ளி மையத்திலும் பயிற்சி அளிக்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடைநின்றவர்கள் எண்ணிக்கை ஜூலை மாத இறுதி நிலவரப்படி 819 பேர் என கண்டறிப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெறும். பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடை நின்றவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...