வரும் 4 ஆண்டுகளில் மின்வாரியம் லாபத்துடன் இயங்கும்
என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். சட்டப்பேரவையில்
மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரைத்து தங்கமணி
பேசியது:-
உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்கு
மின்பாதை அமைத்துத் தாருங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு
மின்சார உற்பத்தியில் தமிழகம் உபரி நிலையை எட்டியுள்ளது. தமிழகத்தில்
மின்உற்பத்தி அதிகரித்து, 2016 மே 29-இல் உச்சகட்ட மின்தேவையான 15,343
மெகாவாட் அளவையும், உச்ச மின் பயனீட்டளவான 345.617 மில்லியன்
யூனிட்டுகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் பூர்த்தி
செய்துள்ளது.
தற்போது மின் உற்பத்திக்காக புதிய மின்நிலையங்கள்,
மின்நிலைய விரிவாக்கங்கள் சூரியஒளி மின் உற்பத்தி, அனல் மின்சாரம், நீர்
மின்சாரம் போன்ற மின் உற்பத்தி மூலம் 18,500 மெகாவாட் மின்சாரம் புதிதாக
உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள்
2021-க்குள் நிறைவு பெறும்.தற்போது 13,500 மெகாவாட் முதல் 14 ஆயிரம்
மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 20 ஆயிரம்
மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். தமிழ்நாட்டில் தனியார் உற்பத்தி செய்யும்
மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்க முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மிகைமின் மாநிலமாக மாறி
இருக்கிறது என்பது விளங்கும்.
மின்வாரியத்தின் வருவாய் இழப்பு என்பது 2015-16ஆம்
ஆண்டில் ரூ.8,542 கோடியாக குறைக்கப்பட்டு, 2016-17-ஆம் ஆண்டில் ரூ.6,374
கோடியாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்னும் 4 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் லாபம் ஈட்டும் வகையில் செயல்படும்.
உதய் திட்டத்தை ஏற்கமாட்டோம்: உதய் திட்டத்தை தமிழக
அரசு ஏற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறி வருகிறார். திமுகவினர்
எப்படித்தான் இந்தத் திட்டத்தை ஆதரிக்கச் சொல்கிறார்களோ தெரியவில்லை.
மக்கள் நலன் பாதிக்கப்படாத வகையில், உதய் திட்டத்தில் மத்திய அரசு
திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே, தமிழகம் அதில் இணையும். 3 மாதங்களுக்கு
ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றியமைக்கலாம் என்று உதய் திட்டத்தில்
கூறப்பட்டிருப்பதை எப்படி ஏற்க முடியும் என்றார் தங்கமணி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...