உலக பள்ளிகள் தடகள வாகையர் போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாணவர்களுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், உலக பள்ளிகள் தடகள வாகையர் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் சி. அஜீத் குமார் ,ஆர். நவீன்,எல். சமயஸ்ரீ மற்றும் எஸ். பிரியதர்ஷினி ஆகியோருக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.உலக மாற்றுத் திறனாளர்களுக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் 4-வது முறையாக முதலிடம் பெற்ற திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கே. ஜெனிதா ஆண்டோவுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலையினையும் வழங்கி வாழ்த்தினார்.
துருக்கியில் டிராப்ஸான் நகரில் 2016 ஜுலை 11-ந்தேதி முதல் 18-ந்தேதி முடிய உலக பள்ளிகள் தடகள வாகையர் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் போது திடீரென ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் காரணமாக துருக்கியில் கடினமான சூழல் நிலவியது. இருப்பினும், அக்கடினமான சூழலிலும் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவ, மாணவியர் பதக்கங்கள் வென்றுள்ளனர்.விளையாட்டுத் துறையில் இம்மாணவ மாணவியர் மேன்மேலும் பல சிகரங்களை எட்டுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், மெட்லே ரிலே போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கமும், 4 *100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்ற சென்னையைச் சேர்ந்த மாணவர் சி. அஜீத் குமாருக்கு ரூ.55 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.மெட்லே ரிலே போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கம்வென்ற மதுரையைச் சேர்ந்த மாணவர் ஆர். நவீன்-க்கு ரூ.25 லட்சம்ஊக்கத் தொகை; மெட்லே ரிலே போட்டியில் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி எல். சமயஸ்ரீ-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை; மும்முறை தாண்டுதல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம்வென்ற சென்னையைச் சேர்ந்த மாணவி எஸ். பிரியதர்ஷினி-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை என மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலையினை முதல்வர் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார்.
மேலும், 2016 ஜுலை 21 முதல் 30-ஆம் தேதி முடிய செர்பியா நாட்டின் நோவி சாட் நகரில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளர்களுக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் 4-வது முறையாக முதலிடம் பெற்ற திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கே. ஜெனிதா ஆண்டோ வுக்குஜெயலலிதா ரூ. 25 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலையினை வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், துறையின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...