வந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர்
இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு
மாணவர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
உள்ளது. இந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை அ.முனியம்மாள், ஆசிரியை வ.வளர்மதி
ஆகியோர் மீது பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஒருவர்
கல்வித் துறைக்கு புகார் மனு அனுப்பிய நிலையில், இது தொடர்பாக கல்வித் துறை
விசாரணை மேற்கொண்டது.
இதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியை அ.முனியம்மாள், கொவளை ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும், ஆசிரியை வ.வளர்மதி, மணிமங்கலம் ஊராட்சி
ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் நிர்வாக மாறுதல் செய்து கல்வித் துறை
உத்திரவிட்டது.
மேலும், கொவளை பள்ளித் தலைமை ஆசிரியை மரகதம், உளுந்தை பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அ.முனியம்மாள், வ.வளர்மதி ஆகியோர் திடீர் பணியிட மாற்றம்
செய்யப்பட்டதைக் கண்டித்து, உளுந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள்
செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன் அமர்ந்து தர்னா
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றும் சமாதானத்தை ஏற்காத மாணவர்கள்
போராட்டத்தை தொடர்வோம் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மாணவர்கள் வகுப்புகளை
புறக்கணித்து போராட்டத்தை தொடர்ந்தனர். அந்தக் கிராம காலனி நுழைவுப்
பகுதியில் தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்களிடமும், பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி
அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு புதன்கிழமை பிற்பகல்
வகுப்புகளுக்குச் சென்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...