திருத்தணி:மாவட்டத்தில் அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிப்பதற்கு ஒரு கோடி
ரூபாய் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யாததால், பொதுப்பணி துறையினர்
கட்டடங்களை அகற்றாமல், மூன்று ஆண்டுகளாக காலதாமதம் செய்கின்றனர்.
இக்கட்டடங்களால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், பெற்றோர்
அச்சப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 287 மேல்நிலைப்
பள்ளிகள், 283 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், பெரும்பாலான பள்ளிகளில்
முறையான நிதி ஒதுக்காதது, சரியான பராமரிப்பு இல்லாதது போன்று, பழுதடைந்த
கட்டடங்கள் பல உள்ளன.
3 ஆண்டுகளாக...உதாரணமாக, திருத்தணி மற்றும்
பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள பெரும்பாலான உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்
வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்கள் இடிந்து விழும் நிலையில்
சேதமடைந்துள்ளன. பள்ளி வளாகத்திலேயே இக்கட்டடங்கள் உள்ளதால், மாணவர்கள்
விளையாடும் போதும், இடைவேளையின் போதும், அதன் அருகே செல்வதால், விபத்து
ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையடுத்து, 2013ம் ஆண்டு, ஜூன் மாதம்,
திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள பழுதடைந்த வகுப்பறை கட்டடங்கள்
மற்றும் ஆய்வகங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்
பேரில், கணக்கெடுப்பு நடந்தது. இதில், எட்டு பள்ளிகளில், பயன்படுத்த
முடியாத, இடிக்க தகுதியான கட்டடங்கள் கண்டறிப்பட்டு, டிசம்பர் மாதம்,
திருத்தணி பொதுப்பணி துறையினருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
கருத்துரு தயாரிப்பு:தொடர்ந்து, பொதுப்பணி
துறையினர், பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை நேரில் ஆய்வு செய்து,
இடிப்பதற்காகும் செலவுகளுக்கான மதிப்பீட்டை தயார் செய்தனர்.
பின், எட்டு பள்ளி கட்டடங்களை இடிப்பதற்கு,
10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு,
2014 பிப்ரவரி மாதம், கருத்துரு தயார் செய்து
அனுப்பினர்.
ஆனால், உரிய பதில் இல்லாததால், அதுகுறித்து
இரண்டு மற்றும் மூன்றாவது முறையாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு,
நினைவூட்டல் கடிதம் அனுப்பினர். இதுவரை அவர்களின் பதில் எதுவும் வராததால்,
பள்ளி கட்டடங்களை இடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள செயல்படாத பள்ளி
கட்டடங்களை அகற்றுவதற்கு, ஒரு கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது.
அதுவரை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் அச்சத்துடன் இருக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருத்தணி பொதுப்பணி துறை
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகாவில் பழுதடைந்த
பள்ளி கட்டடங்கள் இடிக்க தேவையான நிதி முதன்மை கல்வி அலுவலர், எங்களுக்கு
அனுப்பினால். இரண்டு மாதத்தில், ஏலம் விட்டு கட்டடங்கள் இடிக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில் நாங்கள் எதுவும் செய்ய
முடியாது' என்றார்.
மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த கட்டடங்கள்
குறித்து கணக்கெடுத்து, அதை இடிப்பதற்கு, ஒரு கோடி ரூபாய் நிதி
தேவைப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டுக்காக உயர் அதிகாரிகளுக்கும்,
அரசுக்கும், பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். இந்தாண்டு இறுதிக்குள்,
பழுதடைந்த கட்டடங்கள் முழுவதும் இடிக்கப்படும் என, நம்புகிறோம்.பெயர் கூற
விரும்பாத மாவட்ட கல்வி அலுவலர்
என் மகன் இங்குள்ள அரசினர் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து
வருகிறான். இப்பள்ளி வளாகத்தில், பழுதடைந்த
மூன்று வகுப்பறைகள் உள்ளன. இந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும்
நிலையில் உள்ளது. தற்போது, அந்த வகுப்பறைகளில் மாணவர்களை அமர வைப்பதில்லை
என்றாலும், பள்ளிக்கு சென்று, வரும் போதும் பழுதடைந்த கட்டடங்கள் வழியாக
தான் செல்ல வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடக்குமோ என, அச்சத்தில் தான்
அனுப்பி வைக்கிறோம்.ஏ.சுப்ரமணி, அமிர்தாபுரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...