அரசு ஐ.டி.ஐ.,க்களில், 11 ஆயிரத்து
500க்கும் மேற்பட்ட இடங்களில், மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன. 'ஆன்லைன்'
விண்ணப்ப குளறுபடியே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளியில், 8 மற்றும் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு
சார்ந்த, தொழிற் பயிற்சி அளிக்க, 34 இடங்களில், அரசு ஐ.டி.ஐ.,க்கள்
செயல்பட்டு வருகின்றன.
ஓராண்டு, இரண்டாண்டு
படிப்புகள் என, 36 விதமான படிப்புகள் உள்ளன; 180 ரூபாய் தான் கட்டணம். இந்த
ஆண்டில், நிலைமை மோசமாக உள்ளது. அரசு ஐ.டி.ஐ.,க்களில் உள்ள, 32 ஆயிரத்து,
700 இடங்களில், 21 ஆயிரத்து, 479 இடங்களே நிரம்பின. 11 ஆயிரத்து, 521
இடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை
அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டு முதல் முறையாக, 'ஆன்லைன்' வழியாக
விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. 'ஆன்லைன்' விண்ணப்பத்தில்
தவறுகள் இருந்தால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடும். இந்த விவரம்,
விண்ணப்பித்தோருக்கும் தெரியாது. இதுவே, மாணவர் சேர்க்கை குறைய காரணம்.
அடுத்த முறையாவது, 'ஆன்லைன்' விண்ணப்ப முறையை கைவிட்டால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார். காலி இடங்களிலும் மாணவர்களை சேர்க்க, அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, www.skilltraining.tn.gov.in என்ற, 'ஆன்லைன்' வழியாக,
ஆக., 16க்குள் விண்ணப்பிக்கலாம். அடுத்த
கலந்தாய்வு, ஆக., 29 முதல் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. மேலும்,
விபரங்களுக்கு, 94449 02522, 98411 12566 என்ற எண்களில், தொடர்பு
கொள்ளலாம். இந்த முறையாவது இடங்கள் நிரம்புமா என, துறையினர் பெரும்
எதிர்பார்ப்பில் உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...