மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய
பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல்
கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான பயிற்சி
மையங்களும் பெருகத் தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தனியார்
பள்ளிகளும் கூடுதல் வருவாயை ஈட்டும் வகையில், இதற்கான பயிற்சியை
மாணவர்களுக்கு அளிக்க ஆயத்தமாகி வருகின்றன. எனவே, மாணவர்களும் பெற்றோரும்
நன்கு ஆராய்ந்து, பயிற்சி மைய முன்னாள் மாணவர்களிடம் விசாரித்து சிறந்த
பயிற்சி மையத்தைத் தேர்வு செய்தால் மட்டுமே ஏமாறாமல், உரிய பலனைப் பெற
முடியும் என்கின்றனர் பயிற்சி மைய நிர்வாகிகள். 
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ்
மருத்துவப் படிப்புகளில் சேர "நீட்' கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்த
மாதம் உத்தரவிட்டது. இதனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மருத்துவக்
கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டது. எந்தவிதமான தயார்படுத்துதலும் இல்லாமல்
நுழைவுத் தேர்வை எப்படி எழுதுவது என பிளஸ் 2 மாணவர்கள் தவித்தனர்.
இதையடுத்து, மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, நிகழாண்டில் மட்டும் அகில
இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்
நடத்தாமல் இருக்க விலக்கு அளித்து, அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு
வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
ஒப்புதல் அளித்தார். இதனால், நுழைவுத் தேர்வுக்கு விலக்கு பெற்ற
மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டு
இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளிலுள்ள மாநில அரசின் ஒதுக்கீட்டு
இடங்களில் சேர இந்தத் தேர்வை எழுத வேண்டாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்திய "நீட்' குறித்த அதிர்வலை இப்போது சற்று
தணிந்திருக்கிறது என்றாலும், அடுத்த ஆண்டு என்ன நடக்குமோ என்ற அச்சம் தமிழக
மாணவர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், இந்த வாய்ப்பை சரியாகப்
பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் உள்ள
போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தங்களைத் தயார் படுத்தி வருகின்றன. 
இதுகுறித்து சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் சங்கர்
கூறியதாவது: "நீட்' தேர்வு கட்டாயமாக்கப்படும் என்பதை அறிந்த உடனேயே
சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய போட்டித் தேர்வு பயிற்சி
மையங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. தனியார் பள்ளிகளும் இந்த அறிவிப்பைப்
பயன்படுத்தி கூடுதல் வருவாயை ஈட்டத் திட்டமிட்டு, மாணவர்களுக்கு "நீட்'
தேர்வுக்கான பயிற்சியை அளிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றன. இது
வரவேற்கத்தக்கது என்ற போதிலும், பொதுவாகவே தனியார் போட்டித் தேர்வு பயிற்சி
மையங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளோ, விதிமுறைகளோ இதுவரை
நிர்ணயிக்கப்படவில்லை. அவ்வாறு அரசு நிர்ணயிப்பதும் கடினம். இதனால்,
மாணவர்களிடையே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவும், முறையான பயிற்சி
அளிக்கப்படாமல் இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. தனியார் பள்ளிகளும்
இந்தப் பயிற்சிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. மேலும்,
மாணவர்களைக் கவரும் வகையில், இந்திய குடிமைப் பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ்) தேர்வில்
தேர்ச்சி பெறும் ஒரு மாணவரை, பல பயிற்சி மையங்கள் தங்களுடைய மாணவனாக
விளம்பரப்படுத்திக் கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே, இதுபோன்ற பயிற்சி
மையங்களில் சேர விரும்பும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தின்
முன்னாள் மாணவர்களிடம் நன்கு விசாரித்து தேர்வு செய்வதே சிறந்த முறையாக
இருக்கும். தமிழக அரசும் இதுபோன்ற பயிற்சி மையங்களைக்
கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...