டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி தாக்கல் செய்த சமச்சீர் கல்வி
திட்டத்தின்படி அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த
வாய்ப்புள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலித்து
அறிக்கை சமர்ப்பிக்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி உரிமைக்கான பெற்றோர் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி கடந்த 2006-ல் தாக்கல் செய்துள்ள அறிக்கைப்படி, குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக்கல்விச் சட்டம்-2009 பிரிவு 11-ன் கீழ் அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை தொடங்கவில்லை. எனவே அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளைத் தொடங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என கோரப்பட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.மீனாட்சி தனது வாதத்தில், ''அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி போன்ற ஆயத்த கல்விக்கான வகுப்புகள் இல்லை. இதனால் பெற்றோர்களின் மோகம் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கடந்த 2014-ம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கெனவே பள்ளிகல்வித்துறை அறிவித்து இருந்தது. இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை'' என்றார்.அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் டி.என்.ராஜகோபாலன் தனது வாதத்தில், ஏற்கனவே மழலையர்களுக்காக அங்கன்வாடி பள்ளிகள் உள்ளன. அதன்பிறகே குழந்தைகள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர்'' என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ''அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க முடியுமா? என்பது தான் எங்களின் கேள்வி. எனவே டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி ஏற்கெனவே கடந்த 2006-ல் அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடங்க முடியுமா? என்பது குறித்தும் அதற்கான வாய்ப்புகள் குறித்தும் தமிழக அரசு 4 மாதத்துக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...