ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்துக்கும் "சட்ட அலுவலர்' என்ற புதிய பணியிடம்
தோற்றுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
வட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அடிப்படை பணியில் 18 ஆண்டுகளாக
தேர்வுநிலை, சிறப்பு நிலை மற்றும் தேக்கநிலை ஆணை வழங்கப்படாமல் நிலுவையில்
உள்ள ஊதிய உயர்வுகளை வழங்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பதவி உயர்விலிருந்து
இளநிலை உதவியாளர் பதவிக்கு பதவி உயர்வின் போது 3 சதம் ஊதிய உயர்வு வழங்க
வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்)
பணியிடம் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் செ.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்
சா.செந்தமிழ்ச்செல்வன், பொருளர் கு.ராகவேந்திரன், மாநிலச் செயற்குழு
உறுப்பினர் சி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர்
பெ.முனுசாமி நன்றி கூறினார்.
சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலையில் 4.30 லட்சம்
மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு
சுப்பிரமணிய சிவா கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் 2016-17-ஆம் ஆண்டில் 4.30
லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக
ஆலையின் மேலாண் இயக்குநர் ச.கவிதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய
சிவா கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் 2015-16-ஆம் ஆண்டின் கரும்பு அரைவைப்
பருவத்தில் 1.98 லட்சம் மெட்ரிக் டன் கரும்புகள் அரைவை செய்து
முடிக்கப்பட்டுள்ளன. 2016-17-ஆம் ஆண்டின் கரும்பு அரைவைப் பருவம்
நிகழாண்டின் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கரும்பு நடவு செய்துள்ள விவசாயிகள் தங்களது பயிரின் பரப்பளவு குறித்து
31.7.2016-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பதிவு செய்ய
வேண்டும்.
கரும்பு பயிரிடும் விவசாயிகள் கரும்பு பதிவு செய்தல், கரும்பு நடவு அனுமதி,
விவசாயம் சார்ந்த கடனுதவிகள் உள்ளிட்ட விவரங்கள் அறிய கோபாலபுரம்
சுப்பிரமணிய சிவா கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் சி.விஜயகுமார்-9442591259,
அரூர் தெற்கு மற்றும் கோபிநாதம்பட்டி எம்.முருகன்- 9445353089, அரூர்
வடக்கு சி.கேசவகுமரன்-9442598934, மொரப்பூர் சி.கதிரவன்- 9442591222,
பொம்மிடி எம்.கே.செல்வம்- 9442215791, பாப்பிரெட்டிப்பட்டி
ஆர்.கேசவன்-9443407305, அயோத்தியாப்பட்டிணம் கே.ஜி.சரவணன்- 9442591235,
தீர்த்தமலை ஜி.கோகிலா-9442591277 ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பையர்நத்தம் அரசுப் பள்ளியில்
கல்வி வளர்ச்சி நாள் விழா
காமராஜர் பிறந்த தினத்தையொட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் எப்.மணி தலைமை வகித்தார். காமராஜரின் கல்விப் பணிகள்,
சமுதாயத் தொண்டு, தமிழகத்தில் ஆட்சி முறைகள் குறித்து குமாரபாளையம்
எஸ்.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர்
நா.சங்கரராமன் பேசினார்.
விழாவில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் டி.குப்புசாமி, முதுநிலை
ஆசிரியர்கள் தி.ஞானவேல், சி.சரிதா, இளநிலை உதவியாளர் க.சோமசுந்தரம், பள்ளி
மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு
வேப்பனஅள்ளியில் கட்டப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
வேப்பனஅள்ளி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டு நீண்ட
நாள்களாக திறக்கப்படாத நிலையில், அந்தத் தொகுதி எம்எல்ஏ முருகன் மேற்கொண்ட
விரைவு நடவடிக்கை காரணமாக அலுவலகம் திறக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை எளிதாக அளிக்கும் வகையில் வேப்பனஅள்ளி, சூளகிரியில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட பொருளர் ஜெயரான், ஒன்றியச் செயலர்கள் ரகுநாத், அரியப்பன்,
நாகேஷ், முனிராஜுலு, திவாகர், சீனிவாசலு ரெட்டி உள்பட பலர் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டனர்.
இலவச மருத்துவ முகாம்
ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரியம், தி வேல்டு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இலவச
மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட இளநிலைப் பொறியாளர் செல்வராஜ்
தலைமை வகித்தார். உதவிப் பொறியாளர் நிரஞ்சனி, உதவி நிர்வாகப் பொறியாளர்
ஆர்.பத்மநாபன், தி வேல்டு தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.எ.விஜயகுமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கல்லாவி மற்றும் சுற்றுவட்டாரப்
பகுதியில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு
மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒகேனக்கல் குடிநீர் புளோரோசிஸ்
நோய்க் குறைப்புத் திட்டத்தின் கீழ் பல் கறை, கை எலும்பு மற்றும் கால்
எலும்பு வளைந்து காணப்படுதல் போன்றவற்றை மருத்துவர்கள் கண்டறிந்து உரிய
மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை செய்தனர். முகாமில் கல்லாவி
மருத்துவ அலுவலர் சந்திரமோகன், பல் மருத்துவர் பழனி, எலும்பு மூட்டு
மருத்துவர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...