சென்னையில், மாநகராட்சி பள்ளிக்கு எதிரே, பெட்டிக்கடையில் விற்கப்பட்ட
சாக்லேட்டை வாங்கிச் சாப்பிட்ட மாணவன், உயிருக்கு ஆபத்தான நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். சாக்லேட்டில் கஞ்சா
கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகள், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிகளில், பான் மசாலா, குட்கா,
சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட் விதித்த கண்டிப்பான
உத்தரவை தொடர்ந்து, சுகாதார துறையினர் தற்போது அதிரடி சோதனைகள் நடத்தி,
புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கவலைக்கிடமான மாணவன்:இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை, படேல் நகர்
மாநகராட்சி பள்ளிக்கு எதிரே உள்ள பெட்டிக்கடையில், கஞ்சா கலந்த சாக்லேட்
விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அந்த சாக்லேட்டை சாப்பிட்ட ஒன்பதாம்
வகுப்பு மாணவர்கள், 4 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில், பரத்
என்ற மாணவன், 13, சுயநினைவை இழந்து, எழும்பூர் குழந்தைகள் நல
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில், உயிருக்கு ஆபத்தான நிலையில்
அனுமதிக்கப்பட்டு உள்ளான்.
இந்த சம்பவம், முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்துள்ளது.
அதனால், விஷயம் வெளியே தெரியாத வகையில், கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபரை
கைது செய்து போலீசாரும், சுகாதாரத் துறையினரும், உணவு பாதுகாப்பு
துறையினரும் கமுக்கமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பீஹாரில் இருந்து இந்த
சாக்லேட்டுகள் வாங்கி வரப்படுவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
கஞ்சா சாக்லேட் பின்னணி:மேற்கு வங்கம், பீஹார் மாநிலங்களில், பல ஆயிரம்
பள்ளி மாணவர்களை அடிமையாக்கியுள்ள இந்த கஞ்சா சாக்லேட், சமீபத்தில் தான்
சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, குடிசை பகுதி
சிறுவர்களை குறி வைத்து, அங்குள்ள பெட்டிக்கடைகளில் இந்த சாக்லேட் விற்பனை
செய்யப்படுகிறது. மூலிகை சாக்லேட் என்று கூறப்பட்டாலும், இதில் பல்வேறு
மூலிகைகளுடன், கஞ்சா கலக்கப்படுகிறது.போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள,
சாக்லேட்டை பிரித்தாலே, கஞ்சா வாடை 'குப்'பென அடிக்கிறது. கஞ்சா
கலந்துள்ளதை உறுதிப்படுத்த, பறிமுதல் செய்த சாக்லேட்டுகளின் மாதிரியை, உணவு
பாதுகாப்பு துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். நகரில் வேறு
எந்தெந்த கடைகளில், இதுபோன்ற சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என,
விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
மாணவன் பரத், அதிகமாக இந்த வகை சாக்லேட்டை சாப்பிட்டதால், அவனது நரம்பு
மண்டலம், மூளையின் செயல்பாடு பாதித்து சுய நினைவை இழந்திருக்கலாம் என்றும்
யூகிக்கப்படுகிறது. நேர்மையான விசாரணை நடந்தால், நிறைய உண்மைகள்
வெளிவரலாம்.
ரூ.15க்கு விற்பனை!
சர்ச்சைக்குரிய கஞ்சா சாக்லேட் கவரில், சிவபிரசாத் என, அச்சிடப்பட்டுள்ளது.
இதன் விலை, 1 ரூபாய் என அச்சாகி இருந்தாலும், பள்ளி சிறுவர்களுக்கு, 15
ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
பெற்று வரும் சிறுவன் பரத், ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த சாக்லேட்டை
தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளான். தண்டையார்பேட்டை, படேல் நகர் பகுதிகளில்
மேலும் பல சிறுவர்கள் இந்த சாக்லேட்டிற்கு அடிமையாகி உள்ளனர் என்றும்
தெரியவந்துள்ளது.
காப்பாற்ற முயற்சியா
நகரில் வேறெங்கும் இதுபோன்ற சாக்லேட் விற்பனை நடக்கிறதா என, உணவு
பாதுகாப்புத் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தி
வருகின்றனர். சாக்லேட்டை பரிசோதித்த போது, அதில் கஞ்சா கலந்திருப்பது
உத்தேசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் இன்னும் போதை
பொருள் தடுப்பு பிரிவு துறைக்கு மாற்றப்படவில்லை. ஆய்வு முடிவுக்குப்பின்
மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், குறிப்பிட்ட கடைக்காரரை
காப்பாற்ற, உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் முயற்சிப்பதாகவும்
கூறப்படுகிறது.
என் பேரனை காப்பாத்துங்க!
கஞ்சா சாக்லேட் சாப்பிட்டு, சுயநினைவு இழந்து, சிகிச்சை பெற்று வரும்
மாணவன் பரத்தின் பாட்டி நாகேஸ்வரி, 52, கூறுகையில், ''பரத்தை அம்மா, அப்பா
ரெண்டு பேருமே விட்டுட்டுப் போயிட்டாங்க. நான் தான், குழந்தையில இருந்து
வளர்க்கிறேன். திடீர்னு முடியலைன்னு போன புதன் கிழமை இங்க சேர்த்தோம்.
இப்போ வரைக்கும் என் பேரன் கண்ணு முழிக்கலை. ''என் பேரனை எப்படியாவது
காப்பாத்தச் சொல்லி, டாக்டர்கள்ட்ட கெஞ்சுறேன். அவன் சரியாயிட்டான்னா,
இன்னும் நாலு வீட்டுல வேலை பார்த்தாவது, அவனைப் படிக்க வச்சு, பெரிய
ஆளாக்குவேன்,'' என்று வெடித்து அழுகிறார்.
மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அனுமதித்த நாளிலிருந்து, இப்போது
வரை, அச்சிறுவனுக்கு பலவிதமான சிகிச்சைகளை அளித்தோம். ஆனால், உடல் நிலையில்
முன்னேற்றமும் தெரியவில்லை. அவன் சாப்பிட்டதாக கூறப்படும் சாக்லேட்
கிடைத்தால் தான், அதிலுள்ள பொருளின் தன்மை அறிந்து, சிகிச்சை அளிக்க
முடியும்,'' என்றார்.
'வெளியே வர முடியாது'
பத்தாண்டுகளுக்கு முன், வடசென்னையில், கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை
செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பின், மத்திய குற்றப்பிரிவு தலையிட்டு
வழக்கு தொடர்ந்தது. அதனால், வடசென்னையில் சாக்லேட் விற்பனை செய்த கடைகள்
அகற்றப்பட்டன. தற்போது, மீண்டும் கஞ்சா சாக்லேட் விற்பனை
தலை துாக்கியுள்ளது வேதனையளிக்கிறது.
நீதிமன்றம் மட்டுமின்றி, சுகாதார துறை, மாநகராட்சி, போலீஸ் என அனைத்து
துறைகளும் இணைந்து செயல் பட்டால் தான், இப்பிரச்னைக்கு தீர்வு காண
முடியும். சட்டத்திற்கு புறம்பாக, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு
பொருட்களை தயாரிப்போர், விற்போர் மற்றும் விற்க உடந்தையாக இருப்போர் மீது,
ஜாமினில் வெளியில் வர
முடியாத சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க முடியும்.
ராஜா செந்துார் பாண்டியன்
வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...