மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த
ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுஅமலுக்கு
வந்துள்ளது.
இதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 1 கோடி பேர் பயனடைவர். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வானது இனிமேல் செயல்திறன் அடிப்படையில்தான் வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கு 23.6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வகையும் ஏழாவது
ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல்
அளித்தது. இதன் மூலம் மத்திய அரசு
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.2.5
லட்சமாகவும் உயர்ந்தது. இந்த ஊதிய உயர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல்
அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த ஊதிய உயர்வு விகிதமானது, நடைமுறையில்
உள்ள ஊதிய அளவைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமாகும். இந்த ஊதிய உயர்வுக்கான
நிலுவைத் தொகையானது அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம்
தேதிக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான
திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விவரங்கள் குறித்த அறிவிக்கையை மத்திய
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கான செயல்திறன்
மதிப்பீட்டின் அடிப்படையில், "நன்றாகப் பணியாற்றுவோர்' என்ற அளவையின் கீழ்
தற்போது ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில், "மிகச்
சிறப்பாக பணியாற்றுவோர்' என்ற அளவையின் கீழ் வரும் ஊழியர்களுக்கு மட்டுமே
பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்படும்.
10, 20 மற்றும் 30-ஆம் ஆண்டுகளில் ஊழியர்களின் பணி நிலை உயர்வை உறுதிசெய்யும் விதிமுறைகள், தற்போதுள்ளதைப் போலவே தொடரும்.
குறிப்பிட்ட பணி இலக்குகளை அடையாத ஊழியர்கள்
அல்லது பணியில் சேர்ந்து முதல் 20 ஆண்டுகளில் அடைய வேண்டிய பதவி உயர்வை
அடையாதவர்கள் ஆகியோருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும்.
ஊதிய உயர்வு அமல்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இருந்த ஊதிய
அளவை விட 2.5 மடங்கு கூடுதலாக நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் அரசு ஊழியர்கள்
மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
பொதுவாக ஜூலை 1-ஆம் தேதிதான் அரசு
ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரு தேதிகளை ஊதிய உயர்வை
நிர்ணயிப்பதற்கான தினங்களாக இனி கருதப்படும்.
ஊழியர்களின் பணி மூப்பு, வேலைக்கு சேர்ந்த
தினம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த இரு தேதிகளில் ஏதாவது ஒன்றை
வருடாந்திர ஊதிய உயர்வுக்கான நாளாக நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று
அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாட்டுக் குழு: இதனிடையே, மத்திய
அரசு ஊழியர்களின் புதிய ஊதியத்தில் நிலவும் முரண்பாடுகளைக் களைவதற்காக
பிரத்யேகக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று மத்திய
நிதியமைச்சகத்தின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஊதிய முரண்பாட்டுக்கான தீர்வுக் குழுவை
மத்திய பணியாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைக்கும் என்றும்
அதில் தெளிவுபடுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் விளக்கம்
7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அதற்கு
முந்தைய ஆண்டுகளின் ஊதிய உயர்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல என்று
மத்திய அரசு மாநிலங்களவையில் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு
செவ்வாய்க்கிழமை பதிலளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம்
மேக்வால், "தற்போதுள்ள சூழல்கள் மற்றும் காரணிகளை
அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு
ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதை முந்தைய
ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...