மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்
நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநிலப் பொதுச் செயலர் இரா. போஸ். தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளதை
வரவேற்கிறோம். அதனை முழுமையாக ஒளிவுமறைவற்ற நிலையில் நடத்த வேண்டும் எனக்
கோருகிறோம்.
பணிநிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களைத் துன்புறுத்தாமல், மாணவர்
எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் என்ற நிலையை மாற்றி வகுப்புக்கு ஓர் ஆசிரியர்
என்ற நிலையை உருவாக்க வேண்டும். மலைக் கிராமங்களில் பணியாற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கு வாய்ப்புள்ள இடங்களை ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து
கோரி வருகிறோம். தற்போது மத்திய அரசு ஏழாவது ஊதியக் குழுப்
பரிந்துரைகளையும் அமல்படுத்தவுள்ளது. எனவே, ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளைத்
தவிர்த்து மத்திய அரசு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லாப் பொருள்களை எடுத்து வருவதற்கு தனி
அலுவலரை நியமிக்க வேண்டும். இதுதொடர்பாகவும் நிதிநிலை அறிக்கையில் எவ்வித
அறிவிப்பும் இல்லை.
மத்திய அரசு அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில்
4-ஆம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இதனால்
கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். இடைநிற்றல் அதிகரிக்கும்.
ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தவும், அதில்
தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கவும்
திட்டமிட்டுள்ளனர். இவற்றை ரத்து செய்ய வேண்டும். இதற்காக விரைவில்
போராட்டம் நடத்தவும் இருக்கிறோம். மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உரிய
கல்வியாளர்களைக் கொண்ட குழுவை அமைத்து, ஆசிரியர் அமைப்பினரின்
பரிந்துரைகளையும் கேட்டு அமலாக்க வேண்டும் என்றார் அவர். பேட்டியின் போது,
மாவட்டச் செயலர் பொன். ரத்தினம், தலைவர் அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...