மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
கல்விக்கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தேசிய
மயமாக்கப்பட்ட வங்கி கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல் மதுரை
அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை செய்துக்
கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்கி அதிகாரிகளின் இந்த கெடுபிடி
வசூல் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாணவனை இழந்து தவிக்கும் அவரது
பெற்றோருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
“வங்கிகள் குண்டர்கள் அல்லது வசூல் ஏஜெண்டுகளைப் பயன்படுத்தி கடன்
பெற்றவர்களிடம் பறிமுதல் செய்யக் கூடாது” என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல
வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. “வசூல் ஏஜெண்டுகள்” குறித்து இந்திய
ரிசர்வ் வங்கியும் தெளிவான அறிவுரைகளை வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. அதிலும்
குறிப்பாக “வசூல் ஏஜெண்டுகள் அத்துமீறி நடந்தால் அந்த வங்கிக்கு “வசூல்
ஏஜெண்ட்” நியமிக்கும் உரிமை தற்காலிகமாக பறிக்கப்படும்” என்றே
சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது. ஆனாலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியே
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், ரிசர்வ் வங்கி உத்தரவையும் மீறி இப்படி ஈவு
இரக்கமற்ற முறையில் லெனின் என்ற மாணவர் குடும்பத்தினரை மிரட்டியிருப்பது
வேதனையாக இருக்கிறது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ”வேலை கிடைக்காத மாணவர்களின் கடன் மட்டும்
தள்ளுபடி செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆட்சிப்
பொறுப்பேற்றதும் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த மாநிலத்தின் எதிர்காலமாக
கருதப்படும் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி குறித்து எந்தவித
அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆகவே இனியும் தாமதம் செய்யாமல் மாணவர்களின் கல்விக்கடன்கள் அனைத்தையும்
தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். லெனின்
மரணத்திற்கு காரணமான குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி இனி வசூல்
ஏஜெண்டுகளை வைத்து மாணவர்கள் கடனை வசூல் செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி
உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...