தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தாக்க அறிவியல் ஆய்வு
(இன்ஸ்பயர்) விருதுகளுக்கான மத்திய அரசு வழங்கும் ஊக்கத் தொகை
மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி அளவில் மாணவர்களின் அறிவியல்
கண்டுபிடிப்பை ஊக்குவிக்கவும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும் ஆண்டுதோறும்
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் இவ்விருது
வழங்கப்படுகிறது.
முதல்கட்டமாக மாவட்ட அளவில் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு,
அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவியல் படைப்புகள்
உருவாக்கத்திற்கு வழங்கப்படுகிறது. இது, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப
மையம் பரிந்துரையில் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள்
மாநில அளவில், பின் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.
மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் 300 மாணவர்களுக்கு வழங்கப்படும்
ரூ.5,000 ஊக்கத் தொகை தான் மாணவர்களுக்கு முழுவதும் வழங்கப்படுவது இல்லை என
சர்ச்சை கிளம்பியுள்ளது. மாணவர்களின் வங்கி கணக்கிற்கே இத்தொகை வரவு
வைக்கப்பட்டாலும், வங்கியில் இருந்து பணம் எடுத்த பின் ரூ.3 ஆயிரம் வரை
வளர்ச்சி நிதிக்கு என கூறி பள்ளிகள் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்கின்றன.
மீதத் தொகையில் தான் மாணவர்கள் படைப்புகளை உருவாக்குகின்றனர். இதனால்
தேசிய போட்டிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறிப்பிடும் வகையில்
இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்து ஆண்டுகளாக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. முதலில் இத்தொகை
மாணவர்களிடம் நேரடியாக வழங்கும் வகையில் இருந்தது. பின் தலைமையாசிரியர்
பெயரில் வழங்கப்பட்டது. இந்த இரண்டு முறையிலும் மாணவர்களுக்கு முழுத்தொகை
சென்றடைவதில்லை என புகார் எழுந்ததால் தான் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு
தனியாக வங்கி கணக்கு துவங்கி, அதில் அத்தொகை வரவு வைக்கப்பட்டது. தற்போது
இதிலும் ஆசிரியர்கள், பெற்றோர் முடிந்தளவு பணத்தை 'கை வைத்து' விடுகின்றனர்
புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...