உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, உள்நாட்டில்
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, உடனடியாக குறைக்கத்
தேவையில்லை என்று மத்திய நிதித் துறைக்கு மத்திய அரசின் தலைமைப் பொருளாதார
ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பரிந்துரைத்திருக்கிறார்.
இது ஏற்கப்பட்டால்
இனி வரும் மாதங்களில் எரிபொருள் விலை தாறுமாறாக உயரும் ஆபத்து உள்ளது.உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த இரு
ஆண்டுகளாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்தது. ஆனால்,
அதன் பலனை முழுமையாக மக்களுக்கு வழங்காத மத்திய அரசு, பெட்ரோல் மற்றும்
டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி கூடுதல் வருவாயை ஈட்டியது. கடந்த 2014
நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால்
வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47
ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல்
வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது. கடந்த 5 மாதங்களாக உலக சந்தையில் கச்சா
எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அதைக் காரணம் காட்டி பெட்ரோல்,
டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கலால் வரியை
குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்கும்படி மத்திய அரசுக்கு
பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனால், கடந்த 5
மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.14 ரூபாயும், டீசல் விலை 10.89
ரூபாயும் உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது
பெருஞ்சுமை சுமத்தப்பட்டிருக்கிறது.
இனி கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் எரிபொருள் விலையை
உயர்த்த வேண்டுமா அல்லது கலால் வரியை குறைக்க வேண்டுமா? என பொருளாதார
ஆலோசகரிடம் அரசு விளக்கம் கேட்டிருந்தது. இதுகுறித்து அரவிந்த் சுப்ரமணியன்
அளித்துள்ள பதிலில், ‘‘உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65
டாலர் என்ற அளவை எட்டும் வரை கலால் வரியை குறைக்கத் தேவையில்லை. அதன்பின்
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதனால் ஏற்படும் இழப்பில் பாதியளவுக்கு
கலால் வரியை குறைக்கலாம்; மீதியை நுகர்வோர் மீது சுமத்தலாம்’’ என்று
கூறியுள்ளார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றைய நிலவரப்படி, ஒரு
பீப்பாய் 47.24 டாலராக இருந்தது. அதன்படி உள்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல்
ரூ.64.24&க்கும், டீசல் ரூ.56.25&க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடுத்த இரு மாதங்களில் 65
டாலராகவும், இந்தாண்டு இறுதிக்குள் 100 டாலராகவும் உயரும் என்று
கணிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் அரவிந்த் சுப்ரமணியன் பரிந்துரை
ஏற்கப்பட்டால் ஆகஸ்ட் மாத இறுதியில் பெட்ரோல் விலை 85 ரூபாயாகவும், டீசல்
விலை 75 ரூபாயாகவும் இருக்கும். இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத
விலையாகும்.
எரிபொருள் விலை உயர்வு அத்துடன் நிற்கப்போவதில்லை. இந்த ஆண்டு
இறுதியில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்தால் பெட்ரோல் விலை 100
ரூபாயாகவும், டீசல் விலை 90 ரூபாயாகவும் அதிகரிக்கும். இவ்வளவு விலை உயர்வை
இந்திய மக்களால் நிச்சயமாக தாங்கிக் கொள்ள முடியாது.
கச்சா எண்ணெய் விலை சரிந்த போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியை உயர்த்தி பயனடைந்த மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும் போது வரியை குறைக்காமல் மக்கள் மீது முழு சுமையையும் சுமத்துவது முறையல்ல. ஒரு மக்கள் நல அரசுக்கு இது அழகல்ல. தலைமை பொருளாதார ஆலோசகரின் பரிந்துரை ஏற்கப்பட்டால் மக்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டால் அது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது இந்தியாவின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் உதவுவதாக அமையாது.
கச்சா எண்ணெய் விலை சரிந்த போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியை உயர்த்தி பயனடைந்த மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும் போது வரியை குறைக்காமல் மக்கள் மீது முழு சுமையையும் சுமத்துவது முறையல்ல. ஒரு மக்கள் நல அரசுக்கு இது அழகல்ல. தலைமை பொருளாதார ஆலோசகரின் பரிந்துரை ஏற்கப்பட்டால் மக்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டால் அது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது இந்தியாவின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் உதவுவதாக அமையாது.
எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு குறித்த
அரவிந்த் சுப்ரமணியனின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல்
விலைகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். எரிபொருள் விலைகளுக்கு உச்சவரம்பு
நிர்ணயித்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும்,
பெட்ரோல், டீசல் விலைகள் உச்சவரம்பை மீறி உயர்த்தப்படாமல் இருப்பதை மத்திய
அரசு உறுதி செய்ய வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...